7.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


7.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி மற்றும் விடுதி கட்டணங்களை கல்லூரி நிர்வாகத்துக்கு அரசே செலுத்தும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு

மருத்துவப்படிப்பில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் இடம் பெற வேண்டும் என்ற நோக்கில், மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை ஏற்படுத்தி தமிழக அரசு சட்டம் இயற்றியது. அந்த சட்டம் நடப்பு கல்வியாண்டு முதலே அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் 227 எம்.பி.பி.எஸ். இடங்களிலும், சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 86 எம்.பி.பி.எஸ். இடங்களிலும், அரசு பல் மருத்துவக்கல்லூரிகளில் 12 பி.டி.எஸ். இடங்களிலும், சுயநிதி பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 80 பி.டி.எஸ். இடங்களிலும் என மொத்தம் 405 இடங்களில் அரசு பள்ளி மாணவர்கள் இடம்பெற வழிவகை செய்யப்பட்டது.

அதன்படி, கலந்தாய்வு கடந்த 18-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி(நேற்று முன்தினம்) வரை நடைபெற்று முடிந்தது. மொத்தம் இருந்த 405 இடங்களில் 399 இடங்களை அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தேர்வு செய்திருந்தனர்.

முதல்-அமைச்சர் உத்தரவு

கலந்தாய்வின்போது, சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் கல்வி கட்டணம் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால் சில மாணவ-மாணவிகள் அந்த இடங்களை தேர்வு செய்ய தயக்கம் காட்டி, வேண்டாம் என்று திரும்பி சென்றதாக தகவல்கள் வெளியானது. மேலும் சில மாணவ-மாணவிகளின் பெற்றோர் மருத்துவப்படிப்பில் இடம் கிடைத்துவிட்டது... கல்வி கட்டணத்துக்கான பணத்துக்கு எங்கே போவது?... என்ற கவலையுடன் திரும்பிச்சென்றதையும் பார்க்கமுடிந்தது.

இதையடுத்து மருத்துவக்கல்வி இயக்ககம் சார்பில் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் கல்வி கட்டணத்தை செலுத்த வலியுறுத்தாமல் மாணவர் சேர்க்கையை அரசு பள்ளி மாணவர்களுக்கு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி, மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மூலம் மருத்துவப்படிப்பில் சேர ஆணை பெற்ற அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும் என்ற உத்தரவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிறப்பித்து இருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கல்வி உதவித்தொகை

ஜெயலலிதாவின் அரசு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கான வரலாற்று சிறப்புமிக்க ஒரு சட்டத்தை இயற்றியது. அதன்படி, இவ்வாண்டே, மொத்தம் 313 எம்.பி.பி.எஸ். இடங்களிலும், 92 பல் மருத்துவ இடங்களிலும், அரசுப்பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடைபெற்று, மாணாக்கர்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ‘அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப்பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப்பள்ளிகள், வனத்துறை பள்ளிகள் ஆகிய மாணவர்களின் ஏழ்மைநிலை மற்றும் பொருளாதார சூழ்நிலையினை கருத்தில்கொண்டு, அவர்களுக்கு கல்விகட்டணம் மற்றும் இதர செலவினங்களால் சுமை ஏதும் ஏற்படா வண்ணம், இச்செலவினங்களை வழங்குவதற்காக ‘போஸ்ட் மேட்ரிக்’ கல்வி உதவித்தொகை மற்றும் இதர கல்வி உதவித்தொகை திட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்த உரிய உத்தரவினை பிறப்பித்துள்ளேன்’ என கடந்த 18.11.2020 அன்று 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான சேர்க்கை ஆணை வழங்கும் விழாவில் நான் அறிவித்தேன்.

அரசே செலுத்தும்

கலந்தாய்வில், தனியார் மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைக்கப்பெற்றுள்ள மாணவர்கள், கல்வி கட்டணத்தை செலுத்துவதில் உள்ள சிரமத்தினை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே இதனை நான் அறிவித்தேன்.

மேற்கண்ட அறிவிப்பினை செயல்படுத்தும்விதமாக, மருத்துவக்கல்லூரிகள் மற்றும் பல்மருத்துவ கல்லூரிகளில் சேர ஆணைபெற்றுள்ள அனைத்து அரசுப்பள்ளி மாணவ- மாணவிகளின் கல்வி கட்டணத்தை உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) அனுமதி வரும்வரை காத்திராமல், உடனடியாக செலுத்தும்விதமாக, தமிழ்நாடு மருத்துவச்சேவை கழகத்தில் ஒரு சுழல்நிதியை உருவாக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

அந்நிதியில் இருந்து மாணாக்கர்களுக்கான கல்வி, விடுதி கட்டணங்கள் போன்றவற்றை ஜெயலலிதாவின் அரசே நேரடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு செலுத்தும்.

அரசியல் நாடகம்

அரசு பள்ளிகளில் பயின்ற ஏழை, எளிய மாணவர்களுக்கு சம வாய்ப்பு அளித்து அவர்களின் மருத்துவர் ஆகும் கனவினை நனவாக்கி, சமநீதியை நிலைநாட்டி, வரலாற்று சாதனை படைத்த ஜெயலலிதாவின் அரசு, நான் 18.11.2020 அன்றே அறிவித்தவாறு, அம்மாணவர்களின் கல்வி மற்றும் விடுதி செலவுகளையும் ஏற்று, அவர்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை அனைவரும் அறிவர்.

இவர்களுக்கு அரசின் உதவி முழுமையாக கிடைக்கும் என தெரிந்த பின்பும், தி.மு.க. உதவுவதாக தெரிவித்திருப்பது ஒரு அரசியல் நாடகமே என்பதை மக்கள் நன்குஅறிவர்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

கல்லூரிகளை திறக்கும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன? பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் திறக்கப்படும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன? என்பது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளது.

முக கவசம் கட்டாயம்

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் திறக்கப்படும்போது என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?, அங்கு பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் என்ன? என்பது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) நேற்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

* பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி வளாகங்களில் ஒவ்வொருவரும் 6 அடி சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் முக கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். அவ்வப்போது சோப்பு கொண்டு கைகளை கழுவவேண்டும்.

* கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் ‘ஆரோக்கிய சேது’ அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து வைத்திருக்க வேண்டும்.

* மத்திய-மாநில அரசுகளால் பாதுகாப்பானது என்ற அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கல்லூரிகளை மட்டுமே திறக்க வேண்டும். அந்த கல்லூரிகளில் மத்திய, மாநில அரசுகள் வழங்கிய அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்ற வேண்டியது அவசியம். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் மாணவர்கள், பேராசிரியர்களை கல்லூரிகளுக்குள் வர அனுமதிக்கக் கூடாது.

சுழற்சி முறையில் வகுப்புகள்

* வகுப்பறைகளுக்கு வரத்தேவையில்லை என்று சில மாணவர்கள் முடிவு எடுக்கக்கூடும். அவர்கள் வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் கல்வி கற்பதை தேர்வுசெய்யலாம். கல்வி நிறுவனங்கள் அதற்கான ஏற்பாடுகளை ஆன்லைன் மூலம் அளிக்க வேண்டும். மேலும் கற்றல் மற்றும் கற்பித்தல் ஆகியவற்றுக்கு ஆன்லைன் மூலம் பெறக்கூடிய வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

* கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்துவதற்கு ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டு இருக்கவேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தும் வசதிகளில் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு, சுகாதாரம், உணவு, நீர் போன்றவற்றை முறையாக ஏற்பாடு செய்யவேண்டும்.

* சமூக இடைவெளி பின்பற்றமுடியாத கல்லூரி வளாகங்களில் எந்த திட்டங்களையும் செயல்படுத்த வேண்டாம்.

* கல்லூரி கால அட்டவணையாக 6 நாட்கள் என்பதை பின்பற்றலாம். சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் வகுப்பு அறைகளில் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும். வகுப்பு அறைகள் மற்றும் கற்றல் தளங்களில் இடம் இருப்பதை பொறுத்து, 50 சதவீத மாணவர்களுடன் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாம். ஆன்லைன் கற்றல்-கற்பித்தல் நடைமுறைகளுக்கு பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

அனுமதிக்க வேண்டாம்

* கல்லூரிகளில் பார்வையாளர்களை அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு அனுமதிக்கும் பட்சத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவேண்டும். அதேபோல், கல்லூரிகளின் அனைத்து நுழைவுவாயில் மற்றும் வெளியேறும் பகுதிகளில் தெர்மல்ஸ்கேனர் கருவி, கிருமிநாசினி திரவம், முக கவசம் வைக்கப்பட்டு இருக்க வேண்டும். காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்க வேண்டாம்.

* கல்லூரி வளாகத்தில் எச்சில் துப்புவது தண்டனைக்குரிய குற்றமாக இருக்கவேண்டும். நீச்சல்குளம் மூடப்பட்டு இருக்கவேண்டும். உடல்நிலை பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கும், வயதுமுதிர்ந்த, கர்ப்பிணி பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்களை முன்களப்பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம்.

* கல்லூரி விடுதிகளில் அறைகளை பகிரக்கூடாது. அறிகுறி இருக்கும் மாணவர்களை எந்த சூழ்நிலையிலும் விடுதிகளில் தங்க அனுமதிக்கக்கூடாது.

ஊக்கப்படுத்தக்கூடாது

* ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் ஆரோக்கியத்தை தவறாமல் கண்காணிக்க வேண்டும். புத்தகங்கள், பிற கற்றல் பொருட்கள் மற்றும் சாப்பிடக்கூடிய பொருட்களை பகிர்வதை ஊக்கப்படுத்தக்கூடாது.

* மாநில சுகாதாரத்துறை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும். பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான நிலைகளை பராமரிக்க வளாகங்கள் தயாராக இருக்கிறதா? என்பதை சுகாதாரத்துறை உறுதிசெய்ய வேண்டும்.

* உடல்நிலை சரியில்லாமல் மாணவர்கள் இருந்தால், அவர்களை வெளியே செல்ல அனுமதிக்க வேண்டாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.டி., எம்.எஸ். உள்ளிட்ட முதுகலை மருத்துவ படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடங்கள் வழங்கி அரசாணை வெளியீடு ஐகோர்ட்டில் தமிழக அரசு தாக்கல்

எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணைகளை சென்னை ஐகோர்ட்டில், தமிழக அட்வகேட் ஜெனரல் நேற்று தாக்கல் செய்தார்.

அரசு டாக்டர்களுக்கு இடஒதுக்கீடு

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, நடப்பு கல்வியாண்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ முதுகலை படிப்புகளில் 50 சதவீத இடங்களை அரசு டாக்டர்களுக்கு ஒதுக்க உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அரசு டாக்டர்கள் எம்.செய்யது பக்ரூதீன், ஜி.குமரவேல் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அரசு டாக்டர்களுக்கு மருத்துவ முதுநிலை மற்றும் டிப்ளமோ சிறப்பு படிப்புகளில் உரிய இடஒதுக்கீடு அளிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளதால், இந்த படிப்புகளில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசாணை வெளியீடு

இதற்கு மத்திய அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், 50 சதவீத இடங்களை அரசு டாக்டர்களுக்கு ஒதுக்கி உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என்று வாதிடப்பட்டது. மத்திய அரசின் இந்த வாதத்துக்கு மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன் எதிர்ப்பு தெரிவித்தார். சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கிற்கும், 50 சதவீத இடங்களை ஒதுக்குவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வாதிட்டார்.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், “சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்து கடந்த 7-ந்தேதி தமிழக அரசு 2 அரசாணைகளை பிறப்பித்துள்ளது” என்று கூறினார். அந்த அரசாணைகளை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

50 சதவீத இடங்கள்

ஐகோர்ட்டில் 2 அரசாணைகளையும் அட்வகேட் ஜெனரல் தாக்கல் செய்து உள்ளார். தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள 2 அரசாணைகளில், ஒரு அரசாணையில் கூறியிருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின்படி, உரிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர் அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினார். அந்த பரிந்துரைகளை அரசு தீவிரமாக பரிசீலித்தது. அட்வகேட் ஜெனரல் சட்டரீதியான ஆலோசனைகளை வழங்கினார். அதன்படி கீழ்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. மருத்துவ முதுகலை படிப்புகளான எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ். போன்ற படிப்புகளின் மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள் மத்திய அரசுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 50 சதவீத இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகிறது.

மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்ட 50 சதவீத இடங்களில், பாதி இடங்கள் அதாவது 50 சதவீத இடங்களை தமிழக அரசு மருத்துவ துறையில் டாக்டர்களாக பணிபுரிபவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதி உள்ள பாதி இடங்கள், திறந்த வெளியாக அதாவது, அரசு பணியில் உள்ள டாக்டர்களுக்கும், அரசு பணியில் இல்லாத எம்.பி.பி.எஸ். பட்டதாரிகளான டாக்டர்களுக்கும் ஒதுக்கப்படுகிறது.

‘நீட்’ தேர்வு மதிப்பெண்

இவர்கள் அனைவருக்கும், நீட்-முதுகலை தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ். ஆகிய படிப்புகளை முடித்த பின்னர், அவர்களிடம் இருந்து மருத்துவ கல்வி இயக்குனர், ஒப்பந்த பத்திரம் ஒன்றை எழுதி வாங்கவேண்டும். அதில், அவர்கள் ஓய்வு பெறும்வரை அரசு மருத்துவ கல்லூரிகளில் பணிபுரிய வேண்டும் என்ற உத்தரவாதத்தை பெறவேண்டும். மேலும், அவர்களை ஊரகம் அல்லது பின்தங்கிய, கடினமான பகுதிகளில் பணி அமர்த்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ முதுகலை மருத்துவ படிப்புக்கான இடங்களை ஒதுக்குவது தொடர்பாக முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள மற்றொரு அரசாணையில் கூறியிருப்பதாவது:-

சுப்ரீம்கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில், தமிழக அரசுக்கு மருத்துவ கல்வி இயக்குனர் முன்மொழிவு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதன் அடிப்படையில் கீழ்கண்ட உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பிக்கிறது. சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ முதுகலை படிப்பின் மொத்த இடங்களில் 50 சதவீத இடங்களை தமிழக அரசில் பணியாற்றும் டாக்டர்களுக்கும், 50 சதவீத இடங்களை மத்திய அரசுக்கும் ஒதுக்கப்படுகிறது. தமிழக அரசுக்கான 50 சதவீத சூப்பர் ஸ்பெசாலிட்டி படிப்புக்கான இடங்களை, நீட்-சூப்பர் ஸ்பெசாலிட்டி தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் அரசு பணியாற்றும் டாக்டர்களுக்கு ஒதுக்கப்படும்.

கவனமுடன் நடவடிக்கை

இந்த மதிப்பெண் அடிப்படையில், தேர்வு குழு செயலாளர் தேர்ந்து எடுக்கப்பட்ட பட்டியலை தயாரிப்பார். இவ்வாறு இந்த படிப்பில் சேர்பவர்கள், ஓய்வு பெறும்வரை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றுவேன் என்று உத்தரவாதம் அளிக்க வேண்டும். இவர்களுக்கு கிராமப்புறங்களில், கடினமான பகுதிகளில் பணி ஒதுக்கவேண்டும்.

இந்த உத்தரவுகளை சம்பந்தப்பட்ட மருத்துவ துறை அதிகாரிகள் கவனமுடன் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ்-2 தேர்வு ரத்து செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

இந்த கல்வி ஆண்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வந்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

இந்த கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து அரசு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. அரசின் எந்த ஒரு செயலையும் குறை சொல்வதே எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலினின் வாடிக்கையாக உள்ளது. நீட் தேர்வு பயிற்சி தொடங்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது.

பள்ளிக்கூடங்கள் திறக்கும் விஷயத்தில் ஆந்திராவையும், கேரளாவையும் தமிழகத்துடன் ஒப்பிட தேவையில்லை. மாணவர்களின் நலனையும், பெற்றோர்களின் கருத்தையும் கொண்டே தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே அரசு பள்ளி மாணவர்கள் 303 பேருக்கு மருத்துவர் ஆகும் வாய்ப்பை வழங்கி உள்ளது தமிழக அரசுதான். பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களின் மூலம் மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்தை கேட்டு அதன் முடிவு அரசுக்கு தெரிவிக்கப்படும். அதன் பின்னர் பள்ளிக்கூடங்கள் திறப்பது பற்றி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கல்வி ஆண்டில் பிளஸ்-2 தேர்வு ரத்து செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

இந்த கல்வி ஆண்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

பொதுத்தேர்வு ரத்து

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வந்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

இந்த கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து அரசு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. அரசின் எந்த ஒரு செயலையும் குறை சொல்வதே எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலினின் வாடிக்கையாக உள்ளது. நீட் தேர்வு பயிற்சி தொடங்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது.

303 அரசு பள்ளி மாணவர்கள்

பள்ளிக்கூடங்கள் திறக்கும் விஷயத்தில் ஆந்திராவையும், கேரளாவையும் தமிழகத்துடன் ஒப்பிட தேவையில்லை. மாணவர்களின் நலனையும், பெற்றோர்களின் கருத்தையும் கொண்டே தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே அரசு பள்ளி மாணவர்கள் 303 பேருக்கு மருத்துவர் ஆகும் வாய்ப்பை வழங்கி உள்ளது தமிழக அரசுதான். பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களின் மூலம் மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்தை கேட்டு அதன் முடிவு அரசுக்கு தெரிவிக்கப்படும். அதன் பின்னர் பள்ளிக்கூடங்கள் திறப்பது பற்றி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 12-ந் தேதி கடைசி நாள்: மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நேரடியாக நடக்கிறது தரவரிசை பட்டியல் 16-ந் தேதி வெளியீடு

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வருகிற 12-ந் தேதி கடைசி நாள் என்றும், தரவரிசை பட்டியல் வருகிற 16-ந் தேதி வெளியிடப்படும் என்றும், கலந்தாய்வு நேரடியாக நடக்கிறது என்றும் மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

மருத்துவ படிப்புகள்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். அந்த வகையில் நீட் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 13-ந் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவும் வெளியிடப்பட்டுவிட்டது.

ஒவ்வொரு ஆண்டு ஜூலை மாதத்துக்குள் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டு, முதலாம் ஆண்டு மருத்துவ படிப்புக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுவிடும். ஆனால் நடப்பாண்டில் கொரோனா தொற்று காரணமாக நீட் தேர்வும் தாமதமாகவே நடத்தப்பட்டது. இதனால் மருத்துவ மாணவர் சேர்க்கையும் தள்ளிப்போகிறது.

இதற்கிடையில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டுக்கான சட்டமசோதாவை சட்டசபையில் நிறைவேற்றி, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி இருந்தது. அவருடைய ஒப்புதல் கிடைக்க தாமதமானதால், சட்டப்பிரிவுகளின்படி அரசாணையை வெளியிட்டது. அரசாணை வெளியிட்ட மறுநாளே கவர்னர் ஒப்புதல் அளித்தார்.

தரவரிசை பட்டியல்

அதைத் தொடர்ந்து நடப்பாண்டுக்கான மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான அறிவிப்பை மருத்துவ கல்வி இயக்ககம் நேற்று அறிவித்து இருக்கிறது. அதன்படி, நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.orgஎன்ற இணையதளங்களில் நேற்று முதல் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். இதற்கு விண்ணப்பிக்க வருகிற 12-ந் தேதி மாலை 5 மணி கடைசிநாள் ஆகும்.

இவர்களுக்கான தரவரிசை பட்டியல் வருகிற 16-ந் தேதி வெளியிடப்படும். கலந்தாய்வு குறித்த தேதி அலுவலகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். கலந்தாய்வு முடிந்து முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். மருத்துவ மாணவர் சேர்க்கையை அடுத்த மாதம் 31-ந் தேதிக்குள் முடிக்கப்பட்டுவிட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நேரடி கலந்தாய்வு

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடக்குமா? நேரடியாக நடக்குமா? என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நேரடியாகவே நடக்கும் என்று மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்து இருக்கிறது.

இதுதொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் செல்வராஜன் ஆகியோர் கூறுகையில், ‘தரவரிசை பட்டியல் வெளியானதும் கலந்தாய்வு எப்போது? எங்கே நடத்தப்படும்? என்ற அறிவிப்பு வெளியிடப்படும். கலந்தாய்வு இந்த முறையும் நேரடியாக நடைபெறும். கொரோனா காலமாக இருப்பதால், அரசின் கொரோனா முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்தாய்வு நடத்தப்படும்‘ என்றார்.

நடப்பாண்டில் மொத்தம் இடங்களில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கிடைத்துள்ள 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின்படி 303 பேர் அதில் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது.

தமிழகத்தில் மருத்துவ படிப்பு சேர்க்கை.

🩺 MBBS,  BDS, மருத்துவ படிப்புகளுக்கு இன்று 
03 -11-20 முதல் 12-11-20 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

🩺 tnmedicalselection.org என்ற ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

🩺மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் நவம்பர் 16 அன்று வெளியிடப்படும்.

🩺 கலந்தாய்வு நவம்பர் 18 அன்று சென்னை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் நேரடியாக நடைபெறும்.

🩺 அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% தனி ஒதுக்கீடு 303 இடங்களுக்கு தனி விண்ணப்பம் வெளியிடப்படும்.

🩺 26 அரசு கல்லூரி இடங்கள் 3650.

🩺 தனியார் கல்லூரி இடங்கள் 1052.

🩺 நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் 897.

🩺 மேலும் விபரங்கள் அறிய :
tnhealth.tn.gov.in
என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺

உண்மைத்தன்மை சான்று கட்டணம்

ஒவ்வொரு ஆண்டும்  உண்மைத்தன்மை சான்றுக்கு பல்கலைக்கழகத்தால் கட்டண மாற்றப்பட்டு வருகிறது.


2020ம் ஆண்டு தற்போதைய   நிலவரம்

உண்மைத்தன்மை சான்றிதழ் பெறுவதற்கு கட்டணங்கள்


_அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - ₹:1000

தமிழ்ப் பல்கலைக்கழகம் - ₹-1000

சென்னைப் பல்கலைக்கழகம் - ₹ 1000

இந்திர காந்தி தேசிய திறந்தநிலைப பல்கலைக்கழகம் - ₹ 400
பாரதிதாசன் பல்கலைக்கழகம் - ₹ 2000

பாரதியார் பல்கலைக்கழகம் - ₹ 1500

அழகப்பா பல்கலைக்கழகம் - ₹ 1250

மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் - ₹ 1000

மாதம் ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை, தங்கும் வசதியுடன் சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி தமிழக அரசின் குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் வழங்குகிறது

மாதம் ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை, தங்கும் வசதியுடன் சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான இலவச பயிற்சியை தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் வழங்குகிறது.

குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம்

இதுதொடர்பாக அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தின் பயிற்சி துறை தலைவர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் சிவில் சர்வீசஸ் பணிக்கான முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்ற அனைவரையும் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் வாழ்த்துகிறது. சென்னையில் உள்ள பசுமை வழிச்சாலையில் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் கடந்த 54 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

இந்த மையம் தமிழக இளைஞர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் பணி தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய நிர்வாகத்தில் உயர்நிலையினை அடையும் வகையில் இங்கு பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி மையத்தில் பசுமை சூழலுடன் வகுப்பறைகள், தங்கும் இடவசதி, தரமான உணவு வழங்கும் விடுதி, சிறந்த நூலகம் உள்பட அனைத்து வசதிகளும் அமைந்துள்ளன.

ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை

மாணவர்களுக்கு இங்கு கட்டணமின்றி உணவும், அருமையான இயற்கை சூழலில் தங்கி படிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. சிறந்த பயிற்றுனர்களை கொண்டு பயிற்சி அளிப்பதுடன் மாணவர்கள் தங்களை முதன்மை தேர்வுக்கு தயார்படுத்திக்கொள்ளும் வகையில் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.

இதுதவிர முதன்மை தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகையும் அளிக்கப்படுகிறது. தமிழக மாணவர்கள் எங்கு பயிற்சி பெற்று முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும் இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த மையத்தில் இந்த ஆண்டு (2020) 140 பேர் தங்கி படிக்க சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் சேர விரும்பும் தேர்வர்கள் வருகிற 3-ந் தேதி (நாளை மறுதினம்) மாலை 6 மணி வரையில் www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ளலாம்.

முன்னுரிமை அளிக்கப்படும்

இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளும் மாணவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள படி வருமானவரி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்ததற்கான இணைய ரசீதை விண்ணப்பத்துடன் இணைத்து அளிக்க வேண்டும். வருமானம் தொடர்பாக உரிய அதிகாரிகள் அளித்த வருமான வரி சான்றிதழை குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் சேரும்போது ஒப்படைக்க வேண்டும். பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின தேர்வர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அரசு விதிகளுக்கு உட்பட்டு பதிவு செய்தவர்களில் 225 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு குடிமை பணி முதன்மை தேர்வுக்கு பயிற்சியளிக்கப்பட இருக்கிறார்கள். இதில் 140 மாணவர்கள் இலவசமாக தங்கி படிக்க சிறப்பான வழிமுறைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. 85 தேர்வர்கள் தினந்தோறும் வருகைபுரிந்து பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் பயிற்சி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்ற அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

தேவர் சிலைக்கு மரியாதை

ஈரோடு மாவட்டம் கோபி மொடச்சூர் ரோட்டில் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தை நேற்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

முன்னதாக பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தியையொட்டி அங்குள்ள, தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நீட் தேர்வு பயிற்சி

அதன்பின்னர் நிருபர் களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறும்போது, ‘தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறது. மக்கள் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு மீண்டும் 2-வது முறையாக ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்படும். இதுவரை பிளஸ்-2 முடித்த 9 ஆயிரத்து 438 பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்’ என்றார்.