சூரியசக்தியை பயன்படுத்துவதில் புதிய முறைகளை கண்டறிய வேண்டும்: அப்துல் கலாம்


மாணவ, மாணவியருடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மிக்க மகிழ்ச்சி. அணுக்களின் பரிமாற்றம் குறித்து "பாஞ்சாலி சபதம்' எனும் நூலில் பாரதியார் குறிப்பிட்டுள்ளார்; அவரை ஒரு விஞ்ஞானி எனக் கூறலாம். சூரியன் பூமியை சுற்றி வருவது போல, வாழ்க்கையில் நாம் நிலைத்து நிற்க, விடாமுயற்சியுடன் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். கல்லூரி வாழ்க்கை பருவம், ஒரு முக்கியமான கட்டமாகும். அப்போது நாம் கற்கும் கல்வியே, வாழ்க்கையில் முன்னேற வழிவகுக்கும். ஒருவரது வாழ்க்கையின் 20 வயதுக்குள் பெற்றோர், ஆரம்ப கல்வி கற்றுத் தந்த ஆசிரியர் ஆகியோர், எதிர்கால வாழ்க்கையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நல்லறிவு, நல்நோக்கம், கடின உழைப்பு இருந்தால் வெற்றி நிச்சயம். புதிய கண்டுபிடிப்புகளுக்கான தேடல் மிக முக்கியம். சிந்தனை, நல்லறிவு ஆகியவையே ஒருவரை மகானாக திகழச் செய்யும். நாம் செய்யும் பணியில் ஈடுபாடும், கடின உழைப்பும் இருந்தால் வெற்றி எளிதாகும். ஒரு செயலை மேற்கொள்ளும்போது ஏற்படும் தடைகளை கடந்து, வெற்றி பெறும் மனப்பக்குவத்தை வளர்க்கவேண்டும். நாம் பிறந்தோம், வளர்ந்தோம் என்றில்லாமல், நாம் மறைந்த பிறகும் நமது பெயர் நிலைத்திருக்கும் விதத்தில் நமது செயல் இருக்கவேண்டும்; நாட்டின் வளர்ச்சிக்கு அவை உதவவேண்டும்.

பூமி வெப்பமயமாதல், தட்பவெப்ப மாற்றம் ஆகியவற்றை நாம் உணர்ந்து, அவற்றை தடுக்கும் வழி முறைகளை ஆராயவேண்டும். மாணவ பருவத்தில், ஆராய்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது; ஒரு நாட்டின் முன்னேற்றத்திலும் இதுவே முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு அடித்தளம் கல்லூரி வாழ்க்கை. ஒவ்வொரு கல்லூரியும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மாணவர்களுக்கு முழுமையாக உதவவேண்டும். இதன்மூலம் கண்டுபிடிப்புத்திறன் அதிகரிக்கிறது. வேளாண், வேளாண் உற்பத்தி அதிகரிக்கவேண்டும். இன்ஜி., மற்றும் ஐ.டி., தொழில்நுட்பத்தில் அதிக முன்னேற்றம் ஏற்படவேண்டும். இதில், மாணவ, மாணவியரின் பங்கு முக்கியமானது. எதிர்கால தேவையை உணர்ந்து இளைய தலைமுறை செயல்படவேண்டும். வான்வெளி ஆராய்ச்சிதுறையில் வரும் 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் மிகப்பெறும் வளர்ச்சி ஏற்படும். சூரிய சக்தியை பயன்படுத்துவதில் புதிய முறைகளை கண்டறியவேண்டும். கண்டுபிடிப்புத் திறன் மிக முக்கியம். வரும் 2020ம் ஆண்டுக்குள் சோலார் மற்றும் அணுசக்தி பயன்பாடு மிக அதிகமாகும். இதற்காக "சோலார் பவர் சேட்டிலைட்' அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் எனது பங்கும் உள்ளது. இவ்வாறு அப்துல்கலாம் பேசினார்.
மாணவ, மாணவியரின் கேள்விகளுக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தனது கல்லூரி வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை குறிப்பிட்டார். "கல்லூரி பேராசிரியர் சீனிவாசன் என்பவர், குறைந்த உயரத்தில் பறக்கும் விமானத்தை கண்டுபிடிக்கும் திட்டத்தை கொடுத்தார். ஆறு மாத காலத்தில் ஏழு பேர் கொண்ட குழுவாக நாங்கள் செயல்பட்டு வடிவமைத்தோம். பேராசிரியரிடம் காண்பித்தபோது, அதனை ஏற்றுக் கொள்ளவில்லை; மூன்று நாட்கள் மட்டும் அவகாசம் கொடுத்து மாற்றி வடிவமைக்குமாறு தெரிவித்தார். மூன்று நாட்களில் அதை வெற்றிகரமாக செய்து முடித்தோம். அப்போதுதான் நேரத்தின் அருமை குறித்து உணர்ந்தேன். மேலும், மன அழுத்தத்தை எவ்வாறு எதிர்கொள்வது எனவும் தெரிந்தது. அதுபோல, இளைதலைமுறையினர் நேரம் தவறாமையை கடைபிடிக்கவேண்டும்' என்றார் அப்துல் கலாம்.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||