மதிப்பெண் பட்டியலை தொலைத்துவிட்டு, புதிய மதிப்பெண் பட்டியலுக்காக, நீண்ட காலம் காத்திருந்த மாணவர்களில், 20 ஆயிரம் பேருக்கு, ஒரே மாதத்தில், புதிய மதிப்பெண் பட்டியலை வழங்கி, தேர்வுத்துறை சாதனை படைத்துள்ளது.

மதிப்பெண் பட்டியலை தொலைத்துவிட்டு, புதிய மதிப்பெண் பட்டியலுக்காக, நீண்ட காலம் காத்திருந்த மாணவர்களில், 20 ஆயிரம் பேருக்கு, ஒரே மாதத்தில், புதிய மதிப்பெண் பட்டியலை வழங்கி, தேர்வுத்துறை சாதனை படைத்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களை, அதிகம் பேர் தொலைத்துவிட்டு, புதிய மதிப்பெண் சான்றிதழ் கேட்டு, தேர்வுத் துறையிடம் விண்ணப்பிக்கின்றனர். புதிய சான்றிதழ் வாங்குவதற்கு, குறைந்தபட்சம், ஒரு ஆண்டாவது ஓடிவிடும். இந்த வகையில், 30 ஆயிரம் பேர், புதிய சான்றிதழ் கேட்டு, விண்ணப்பித்திருந்தனர். கடந்த மாதம், தேர்வுத் துறை இயக்குனராக பதவியேற்ற தேவராஜன், மாதக்கணக்கில், தேங்கிக் கிடந்த விண்ணப்பங்கள் மீது, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க, ஏற்பாடு செய்தார். 

அதன் காரணமாக, 8,464, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களும், 10,697, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களும், மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பில், 2,434 விண்ணப்பங்களும், பிளஸ் 2 வகுப்பில், 7,830 விண்ணப்பங்களும், நிலுவையில் இருப்பதாகவும், இந்த விண்ணப்பங்கள் மீதும், விரைவில் நடவடிக்கை எடுத்து, மதிப்பெண் சான்றிதழ்கள் அனுப்பப்படும் என்றும், இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார். 

இது குறித்து, அவர், மேலும் கூறியதாவது: புதிய மதிப்பெண் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிப்பவர் விவரங்களை, உடனுக்குடன், இணையதளத்தில் வெளியிட ஏற்பாடு செய்துள்ளோம். விண்ணப்பிப்பவர்கள், தங்களது பதிவு எண்களை, பதிவு செய்தால், விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம். சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்த விண்ணப்பங்களும், அதிகளவில் வருகின்றன. இவற்றில், வேலைவாய்ப்பு தொடர்பாக கேட்கப்படும் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களை, உடனுக்குடன் சரிபார்த்து தர, ஏற்பாடு செய்துள்ளோம். உயர்கல்வி படிப்புகளில் சேர்வோரின் சான்றிதழ்களையும், வேகமாக சரிபார்த்து தர திட்டமிட்டுள்ளோம். அனைத்து சான்றிதழ்களையும், "ஸ்கேன்" செய்து, இணையதளத்தில் வெளியிட ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம், உயர்கல்வி நிறுவனங்களோ அல்லது வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களோ, இணையதளம் வழியாக, சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இவ்வாறு, தேவராஜன் தெரிவித்தார். 


Comments