2013-14 ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை மாண்புமிகு முதல்வர் அவர்கள் வழங்கினார்

2013–14–ம் கல்வியாண்டில் 11–ம் வகுப்பு படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு, 6 லட்சத்து 43 ஆயிரத்து 867 விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தும், 2012–13–ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12–ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் முதல் 3 இடங்களைப்பிடித்த மாணவர்களுக்கு ரொக்கப்பரிசுகளை வழங்கியும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்தினார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணியாக விளங்கும் கல்வியை அனைத்து மாணவ, மாணவியரும் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12–ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவிகள் அனைவருக்கும் சைக்கிள்கள் வழங்கும் திட்டம் 2001–2002–ம் ஆண்டு முதல்–அமைச்சரால் தொடங்கப்பட்டது. பின்பு, 2005–2006–ம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11–ம் வகுப்பு பயிலும் அனைத்து பிரிவு மாணவ, மாணவியருக்கும் இத்திட்டத்தின் கீழ் சைக்கிள்கள் வழங்கப்பட்டு மாணவ, மாணவியர் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர்.

நடப்பு கல்வியாண்டில் ரூ.212 கோடியே 43 லட்சம் செலவில் 2,86,328 மாணவர்கள் மற்றும் 3,57,539 மாணவிகள் என மொத்தம் 6,43,867 மாணவ, மாணவியருக்கு சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கும் முகமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா 7 மாணவ, மாணவியருக்கு சைக்கிள்களை வழங்கி வாழ்த்தினார்.சைக்கிள்களை பெற்றுக்கொண்ட மாணவ, மாணவிகள், முதல்–அமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொண்டனர்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மாநில அளவில் 10 மற்றும் 12–ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில், ரொக்கப்பரிசுகள் வழங்கும் திட்டமும் இதில் ஒன்றாகும்.இந்த திட்டத்தின் கீழ் மாநில அளவில் 10–ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ, மாணவியருக்கு முறையே ரூ.25 ஆயிரம், ரூ.20 ஆயிரம் மற்றும் ரூ.15 ஆயிரம் என்ற வீதத்திலும், 12–ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ, மாணவியருக்கு முறையே ரூ.50 ஆயிரம், ரூ.30 ஆயிரம் மற்றும் ரூ.20 ஆயிரம் என்ற வீதத்திலும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்தவர்களில் ஒவ்வொரு பிரிவிலும் மாணவர்களுக்குத் தனியாகவும், மாணவியருக்குத் தனியாகவும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்படுகின்றன.

அதன்படி, 2013–ம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12–ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற 80 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு ரூ.14 லட்சத்து 5 ஆயிரத்துக்கான ரொக்கப்பரிசுகள் வழங்கப்படுகிறது. இவர்களில் 7 மாணவ, மாணவியருக்கு ரொக்கப்பரிசுகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கி வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ந.சுப்ரமணியன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.அப்துல் ரகீம், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.அருள்மொழி, மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Comments