தமிழகத்தில் டிசம்பர் மாதம் நடக்க உள்ள குரூப்–2 தேர்வுக்கான பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் பேட்டி

தமிழகத்தில் 3 கட்டமாக டிசம்பர் மாதம் நடத்தப்படும் குரூப்–2 தேர்வுக்கான திருத்தப்பட்ட பாடத்திட்டம் தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் கூறினார்.

டி.என்.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்–2, குரூப்–4, வி.ஏ.ஓ, தேர்வுகள் உட்பட பல்வேறு வகையான தேர்வுகளை நடத்தி அரசு பணிக்கு தேவையான அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தேர்வு செய்து காலிபணியிடங்களை நிரப்பி வருகிறது. இந்த வகை தேர்வுகளில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது குரூப்–2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், அதற்கான பாடதிட்டமும் வெளியிடப்பட்டு உள்ளது.     

இதுகுறித்து தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன், தினத்தந்தி நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– தமிழகத்தில் 2013–14–ம் ஆண்டில் காலியாக உள்ள 66 துணை வணிக வரி அதிகாரி பதவிகள், 302 கூட்டுறவு சங்கங்களில் முதுநிலை ஆய்வாளர் பதவிகள். மேலும் 147 கைத்தறித்துறை ஆய்வாளர் பதவிகள், 14 சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி பதவிகள், 71 உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர் பதவிகள், 370 வருவாய் உதவியாளர் பதவிகள், 2 சார் பதிவாளர்கள் மற்றும் 92 பல்வேறு பிரிவு பணியிடங்கள் உட்பட 1,064 பணியிடங்கள் நிரப்புவதற்கான குரூப்–2 தேர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி பட்டப்படிப்பாகும். இதற்கான எழுத்து தேர்வு டிசம்பர் மாதம் 1–ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு அக்டோபர் 4–ந்தேதி வரை விண்ணப்பிக்க காலகெடு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள் அக்டோபர் 8–ந்தேதி ஆகும். இந்த தேர்வில் விண்ணப்பிப்பவர்கள் நலன் கருதி தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணைய இணையதளத்தில் பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முறைகளில் எந்த மாற்றமும் செய்யாமல், ஒளிவுமறைவின்றி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். 3–வது கட்டமாக தேர்வு செய்யப்பட உள்ள இந்த தேர்வில், தாய்மொழியான தமிழுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த அதிகாரிகளை தேர்வு செய்யும் வண்ணம் ‘‘ஆப்டிடியூட்’’ எனப்படும் திறனறிவுத்தேர்வு பகுதியையும் சேர்த்துள்ளோம். அரசு பணியில் ஏற்படும் கால் இடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். எனவே, காலி பணியிடங்கள் கண்டறியப்பட்டு உடனுக்குடன் நிரப்பப்படும். தகுதியான பதவிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

குரூப்–2 மெயின் தேர்வில் தேர்வர்களின் பொதுவிழிப்புணர்வு, பகுத்து ஆராயும் திறன், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வரைவு எழுதல் ஆகிய திறமைகளை சோதிக்கும் வகையில் பாடத்திட்டம் அமைந்திருக்கும். திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் மூலம் திறமை வாய்ந்த அரசு பணியாளர்களை தேர்வு செய்ய இயலும். புதிய பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) தெரிந்து கொள்ளலாம். வரும் காலங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தரம் கொண்ட குரூப்–4, வி.ஏ.ஓ. தேர்வுகளுக்கான பாடத்திட்டம் தமிழிலும் வெளியிடப்படும்.

டி.என்.பி.எஸ்.சி.யில் அமல்படுத்தப்பட்டு வரும் நல்ல மாற்றங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருவதுடன், தேவைப்பட்டால் அவற்றை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

டி.என்.பி.எஸ்.சி.க்கு என்று தனியாக உள்ள விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டு வருவதால் முறைகேடுகள் இடமின்றி தகுதியான நபர்களை தேர்வு செய்து வருகிறோம். அரசு துறைகளில் ஏற்படும் காலி இடங்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட துறைகளில் பெற்று உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments