சிறப்பாக பணிபுரிந்த 370 ஆசிரியர்களை பாராட்டி நல்லாசிரியர் விருதை பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் வழங்கினார்.

சிறப்பாக பணிபுரிந்த 370 ஆசிரியர்களை பாராட்டி நல்லாசிரியர் விருதை பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை  அமைச்சர் பழனியப்பன் வழங்கினார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினவிழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரி பள்ளியில் நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் த.சபீதா தலைமை தாங்கினார்.

பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் கலந்துகொண்டு, சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களை பாராட்டி அவர்களுக்கு சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கினார்.

சென்னை திடீர் நகர் சென்னை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ஜாக்குலின் மேரி, எழும்பூர், சென்னை நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியை கனகலட்சுமி, நாசரேத் மர்காஷியஸ் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெபராஜ், அம்பத்தூர் சேதுபாஸ்கரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் செல்வகுமார், ராயபுரம் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியை லூசியா மேரி உள்பட 370 நல்லாசிரியர் விருது பெற்றனர்.

விழாவில் அமைச்சர் பழனியப்பன் பேசுகையில், ‘தமிழ்நாட்டில் கல்வி உன்னத நிலையை அடைய முதல்–அமைச்சர் ஜெயலலிதா பல் வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் அடுத்த 10 வருடங்கள் கழித்து தமிழ்நாட்டில் குடிநீர், மருத்துவம், மின்சாரம், கல்வி ஆகியவவை எப்படி இருக்கும் என்று ஆராய்ந்து முன்கூட்டியே திட்டமிட்டு தொலைநோக்குபார்வையுடன் திட்டங்களை தீட்டி இருக்கிறார்’ என்றார்.

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா பேசுகையில், ‘இந்தியாவில் தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முன்னேற்றமான மாநிலமாக முதல் அமைச்சர் ஜெயலலிதா மாற்றி வருகிறார். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து செயல்படுத்தி வருகிறார். கல்வியில் தமிழகம் சிறந்து விளங்கவேண்டும் என்று எண்ணி பலவேறு நலத்திட்டங்களை முதல் அமைச்சர் செயல்படுத்தி வருகிறார். கல்வித்தரமே பள்ளிக்கல்வித்துறையின் தாரக மந்திரம். ஒரே நேரத்தில் 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களுக்கு பணிஆணைகளை வழங்கினார்’ என்றார்.

சென்னை கலெக்டர் எ.சுந்தரவல்லி ஆசிரியர் நல நிதியாக ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குனர் சி.நா.மகேஸ்வரன், அனைவருக்கும் கல்வி திட்ட மாநில இயக்குனர் பூஜா குல்கர்னி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் இரா.பிச்சை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் ச.கண்ணப்பன் உள்பட பலர் பேசினார்கள்.

அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன், அனைவருக்கும் இடை நிலைக்கல்வி இயக்குனர் ஆ.சங்கர், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் க.அறிவொளி, இணை இயக்குனர்கள் கருப்பசாமி, கார்மேகம், உஷாராணி, பூ.ஆ. நரேஷ், லதா, பழனிச்சாமி உள்படபலர் கலந்துகொண்டனர்.

சென்னை முதன்மை கல்வி அதிகாரி டி.ராஜேந்திரன் விழா ஏற்பாடுகளை உடன் இருந்து கவனித்தார். தொடக்கத்தில் பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் வரவேற்றார். தொடக்க கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன் நன்றி கூறினார்.

Comments