குக்கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் விடுமுறை கடிதம் கொடுக்காமல் வகுப்புக்கு செல்லாமல் இருக்கிறார்களா? என்பதை கண்காணிக்க உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

குக்கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் விடுமுறை கடிதம் கொடுக்காமல் வகுப்புக்கு செல்லாமல் இருக்கிறார்களா? என்பதை கண்காணிக்க உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

குக்கிராமங்கள் மற்றும் தொலைதூர இடங்களில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஒருசில ஆசிரியர்கள் விடுமுறை கொடுக்காமல் வகுப்புக்கு செல்லாமல் இருப்பதாக தொடக்கக் கல்வி இயக்குனருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அண்மையில் கல்வி அதிகாரிகளுடன் பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா நடத்திய ஆய்வின்போது, இந்த பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. இதுபோன்று விடுமுறை கடிதம் கொடுக்காமல் பள்ளிக்குச் செல்லாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இத்தகைய செயல்களை கண்காணித்து தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு தொடக்கக் கல்வி இயக்குனருக்கு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபீதா உத்தரவிட்டார்.

இந்த நிலையில், குக்கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் விடுமுறை கடிதம் கொடுக்காமல் வகுப்புக்கு செல்லாமல் இருப்பதை தடுக்க உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் தலைமையில் சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குனர் ஆர்.இளங்கோவன், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:– குக்கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிலர் விடுமுறை விண்ணப்பம் அளிக்காமல் பள்ளிக்கு வராமல் இருப்பதாகவும், அத்தகைய ஆசிரியர்களை கண்காணித்து தடுக்க சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அரசு ஆணையிட்டுள்ளது.

அதனால், பள்ளிகளில் விடுமுறை விண்ணப்பம் கொடுக்காமல் பணிக்கு வராமல் இருப்பவர்களை கண்டறிந்து தடுப்பதற்காக வட்டார அளவில் குழுக்களை ஏற்படுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரியும், அனைவருக்கும் கல்வி திட்ட கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், வட்டார அளவில், பஸ் வசதி இல்லாத தொலைதூர கிராம பகுதிகளில் உள்ள பள்ளிகளின் பட்டியலை தயாரிக்க வேண்டும். ஒரேநாளில் உதவி தொடக்கக் கல்வி அதிகாரியும், வட்டார வளமைய மேற்பார்வையாளரும், ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும். காலையில் ஒரு பள்ளியும், மாலையில் ஒரு பள்ளியும் கண்காணிக்கப்பட வேண்டும். தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது மேல்நடவடிக்கை எடுத்து அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் வருவதை உறுதிசெய்ய வேண்டும்.

ஒவ்வொரு வாரமும் இதுபோன்ற திடீர் ஆய்வை மேற்கொண்டு வாராந்திர அறிக்கையை உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி அந்த அறிக்கையை தொகுத்து அதற்குரிய படிவத்தில் விவரங்களை குறிப்பிட்டு, தொடக்கக்கல்வி இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.

Comments