தேர்வுத்துறை தொடர்பாக ஏற்படும் பிரச்னைகளை ஒரே நாளில் தீர்ப்பதற்காக நவீன வசதிகள் கொண்ட தகவல் மையத்தை தேர்வுத் துறை அமைக்க உள்ளது.

தேர்வுத்துறை தொடர்பாக ஏற்படும் பிரச்னைகளை ஒரே நாளில் தீர்ப்பதற்காக நவீன வசதிகள் கொண்ட தகவல் மையத்தை தேர்வுத் துறை அமைக்க உள்ளது. சென்னை கல்லூரிச்சாலையில் உள்ள டிபிஐ வளாகத்தில் அரசு தேர்வுகள் இயக்ககம் இயங்கி வருகிறது. பள்ளி பொதுத் தேர்வுகள், நேரடி எட்டாம் வகுப்புக்கான தேர்வு, ஆசிரியர் பயிற்சி பள்ளி தேர்வு, தேசிய திறனறி தேர்வு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் என 15க்கும் மேற்பட்ட தேர்வுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் நடத்தி வருகிறது. 

இந்த தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் திருத்துவது, தேர்வு முடிவுகள் வெளியிடுவது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் இந்த இயக்ககம் செய்து வருகிறது. இந்நிலையில், தேர்வுகள் தொடர்பான பிரச்னை எதுவாக இருந்தாலும் சம்மந்தப்பட்ட மாணவ, மாணவியர் நேரடியாக தேர்வுத்துறைக்கு வரவேண்டியுள்ளது. அப்படி வரும் மாணவர்களுக்கு உதவுவதாக கூறிக் கொண்டு வெளிநபர்கள், துறை அலுவலகங்களில் நுழைகின்றனர். இதனால் பிரச்னைகள் உருவாகின்றன. இதை தவிர்க்க டிபிஐ வளாகத்தில் தேர்வுத்துறை, தகவல் மையம் ஒன்றை அமைத்துள்ளது. ஆனால் இங்கு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுக்கான விண்ணப்பங்கள், மைக்ரேஷன் விண்ணப்பம், மதிப்பெண் பட்டியல் திருத்த விண்ணப்பம், தக்கல் விண்ணப்பங்கள் கொடுப்பது, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெறுவது, மாணவர்களின் சந்தேகங்களை விளக்குவது ஆகிய பணிகள் மட்டுமே செய்யப்படுகிறது. மதிப்பெண் பட்டியலில் திருத்தம் செய்வது, டூப்ளிகேட் மதிப்பெண் பட்டியல், மைக்ரேஷன் சான்று, உண்மைத் தன்மை சான்று பெறுதல் ஆகியவற்றுக்காக மாணவர்கள் அலுவலக பிரிவுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் தேர்வுத் துறையில் பணிகள் பாதிக்கப்படுகிறது. இவற்றை தவிர்ப்பதற்காக தகவல் மையத்தை நவீனப்படுத்தும் பணியில் தேர்வுத்துறை இறங்கியுள்ளது. இதன்படி, தகவல் மையத்தில் ஒரு கண்காணிப்பாளர் நியமிக்கப்பட உள்ளார். 

புதியதாக கணினிகள் பொருத்தப்படுகிறது. தேர்வுகள் தொடர்பான அனைத்து தகவல்களும் அந்த கணினியில் இருக்கும். தகவல் மையத்துக்கு வரும் மாணவர்கள் தங்கள் பிரச்னை எதுவாக இருந்தாலும் அதை தகவல் மையத்தில் பூர்த்தி செய்து கொடுத்தால் அதை கண்காணிப்பாளர் கணினி மூலம் ஆய்வு செய்வார். பின்னர் அந்த விண்ணப்பங்கள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு அதே நாளில் தீர்வு காணப்படும். இதனால் மாணவர்களுக்கு அலைச்சல் குறையும். தேர்வுத்துறைக்குள்ளும் வரவேண்டியதில்லை. இதனால் வெளியாட்கள் துறைக்குள் வர முடியாது. இத தவிர தேர்வு தொடர்பான சந்தேகங்கள் குறித்து விவரங்கள் பெற விரும்பும் மாணவர்கள் வசதிக்காக இரண்டு தொலைபேசிகள் அந்த தகவல் மையத்தில் அமைக்கப்படுகிறது. விவரம் பெற விரும்பும் மாணவர்கள் 044,28275125, 28275126 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Comments