10ம் வகுப்பு அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பு தேதி நீட்டிப்பு

2013-14 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்குத் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ள அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் அறிவியல் செய்முறைப் பயிற்சி வகுப்பில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ள அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து 03.06.2013 முதல் 30.06.2013க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

மேற்குறிப்பிட்டுள்ள தேதியில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளத் தவறிய நேரடி தனித்தேர்வர்கள், அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் பெயர்களைப் பதிவு செய்து பயிற்சி பெறாமல் அறிவியல் செய்முறை/கருத்தியல் தேர்வைத் தவிர ஏனைய பாடங்களில் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் மற்றும் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வை நேரடித் தனித்தேர்வராக எழுத விரும்பினால் அவர்களும் தங்கள் பெயர்களை 01.10.2013 முதல் 15.10.2013 வரை அறிவியல் செய்முறைப் பயிற்சி வகுப்புக்குப் பதிவு செய்து கொள்ளலாம்.

தனித்தேர்வர்கள் இதைக் கடைசி வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு http://dge.tn.gov.in மற்றும் www.tndge.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட இரு விண்ணப்பங்களுடன் செய்முறைத் தேர்வுக் கட்டணம் ரூ.125க்கான வங்கி வரையோலையை ஏதேனும் ஒரு வங்கியில் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலரின் பதவிப் பெயரில் பெற்று இணைத்து சம்பந்தப்பட்ட கல்வி அலுவர்களிடம் 15.10.2013க்குள் நேரில் ஒப்படைத்தல் வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

Comments