வங்கக் கடலில் உருவான "பாய்லின்' புயல்

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது.

"பாய்லின்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், ஆந்திரம் - ஒடிசா மாநிலங்களுக்கு இடையே வரும் 12-ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "பாய்லின்' என்ற தாய்லாந்து மொழி சொல்லுக்கு நீல நிற கல் என்று பொருள்.

கரையைக் கடக்கும்: வட அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் செவ்வாய்க்கிழமை உருவானது.

பின்னர் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக புதன்கிழமை காலை வலுப்பெற்று, மாலையில் புயலாக மாறியுள்ளது.

புதன்கிழமை இரவு வரையிலான நிலவரப்படி இது விசாகப்பட்டணத்தில் இருந்து 1100 கி.மீ. தூரத்தில் நிலைகொண்டிருந்தது. இப்போது வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

இது கலிங்கப்பட்டணம் - பாரதீப் இடையே சனிக்கிழமை இரவு கரையைக் கடக்கும். பாய்லின் புயல் உருவானதைத் தொடர்ந்து ஆந்திரம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சூறாவளிக் காற்று: இந்த புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் சுமார் 175-185 கி.மீ. வேகத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் புயலால் ஆந்திரம், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும்.

வங்கக் கடலில் புயல் உருவாகியுள்ளதால் தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கனமழை: இந்த நிலையில் வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியில் 200 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) - புதன்கிழமை காலை வரையிலான நிலவரம்: பஞ்சபட்டி - 120, கிருஷ்ணகிரி - 90, பையூர் - 80, தோகைமலை, அறந்தாங்கி, பென்னாகரம், ஒகேனக்கல், செங்கம், கீரனூர் - 70, ஊத்தங்கரை, சாத்தனூர் அணை, ராயக்கோட்டை - 60, விருதுநகர், திருச்சி, கோவில்பட்டி, காரைக்குடி, ஆத்தூர் - 50, நத்தம், ஒசூர், அரூர், தேவகோட்டை, செஞ்சி, சேலம் - 40, ஏற்காடு, பரமக்குடி, கடலூர், குன்னூர், பழனி, திருவண்ணாமலை, ஈரோடு, சாத்தூர், விழுப்புரம் - 30, மேட்டூர், ஒரத்தநாடு, பெருந்துறை, அரியலூர், நாமக்கல், கும்பகோணம், திருவையாறு, பெரம்பலூர், ஆம்பூர், கரூர், உசிலம்பட்டி, கல்லணை, தருமபுரி - 20, வாழப்பாடி, பாபநாசம், கமுதி, பாளையங்கோட்டை, வால்பாறை, பவானி, விருதாச்சலம் - 10.

இந்நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு கனமழை பெய்தது.

Comments