'ஆன்-லைனில்' துறைத்தேர்வு.

அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வுகளை 'ஆன்லைன்' மூலம் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.பதவி உயர்வு, திறன் மேம்பாடு போன்றவற்றிற்காக அரசு ஊழியர்களுக்கு துறைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன . இந்த தேர்வுகளை மாநில அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமும், மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமும் நடத்துகின்றன. மின்னாளுமை திட்டத்தின் மூலம் அனைத்து அரசு துறைகளும் 'ஆன்லைன்' மூலம் இணைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் பணியாளர் தேர்வாணையங்களும் கணினிமயம் ஆக்கப்பட்டுள்ளன. தற்போது அனைத்து வகை தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் 'ஆன்லைனில்' வெளியிடப்படுகின்றன. ஒருசில போட்டித் தேர்வுகளும் 'ஆன்லைனில்' நடத்தப்படுகின்றன. 2016 முதல் அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகளையும் 'ஆன்லைனில்' நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்பின் மாநில அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வுகளும் 'ஆன்லைனில்' நடத்தப்படும்.

மாற்றுத்திறனாளிகளின் ஊர்திப்படி மாவட்ட அலுவலர்களுக்கு அதிகாரம்

தாமதத்தை தவிர்க்க மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு ஊர்திப்படி வழங்கும் அதிகாரத்தை துறைத்தலைவர்களிடம் இருந்து மாவட்ட அலுவலர்களுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. அரசு அலுவலகங்கள், பள்ளிகள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊர்திப்படி வழங்கப்படுகிறது. இதனை பெற அவர்கள் தேசிய அடையாள அட்டை, அரசு மருத்துவ குழு அளிக்கும் மாற்றுத்திறன் தன்மை, மாவட்டமாற்றுத்திறனாளி நல அலுவலர் ஒப்புதல் கடிதம் ஆகியவற்றை பெற வேண்டும்.பின் அவற்றை சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்களுக்கு அனுப்பி வைத்து அனுமதி பெற வேண்டும். இதற்கு பல மாதங்கள் தாமதம் ஆவதாக, மாற்றுத்திறனாளிகள் புகார் தெரிவித்தனர். தாமதத்தை தவிர்க்க, தேசிய அடையாள அட்டை, அரசு மருத்துவ குழு அளிக்கும் மாற்றுத்திறன் தன்மை, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஒப்புதல் கடிதத்தை சான்றாக ஏற்று, அந்தந்த துறைகளின் மாவட்ட அலுவலர்களே ஊர்திப்படி அனுமதிக்கலாம் என, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அரசுக்கு பரிந்துரை செய்தார்.இதையடுத்து மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு ஊர்திப் படி வழங்கும் அதிகாரத்தை துறைத்தலைவர்களிடம் இருந்து மாவட்ட அலுவலர்களுக்கு மாற்றி நிதித்துறை செயலர் சண்முகம் உத்தரவிட்டார்.

நிகர் நிலை பல்கலை மாணவர் சான்றிதழ் சரிபார்ப்பை யூ.ஜி.சி செய்யும்.

நிகர் நிலை பல்கலை மாணவர் சான்றிதழ் சரிபார்ப்பை, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டாம்; பல்கலை மானிய குழுவான, யூ.ஜி.சி., பார்த்து கொள்ளும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் படிக்க செல்லும் அல்லது பணிக்கு செல்லும் மாணவர் சான்றிதழ்களை, சரிபார்க்கும் பணி, மாநில அரசுகளின் அயல்நாடு விவகாரத் துறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், 'நிகர் நிலை பல்கலைகளின் சான்றிதழ், மாநில அரசுகளால் சரியாக ஆய்வு செய்யப்படவில்லை. சான்றிதழின் உண்மை தன்மை குறித்த அறிக்கை, தாமதமாக கிடைக்கிறது' என, புகார் எழுந்துள்ளது. இதனால், பல நேரங்களில், போலி சான்றிதழ் வருவதாக வெளிநாட்டு நிறுவனங்கள் கூறுகின்றன. இந்த பிரச்னையை தீர்க்க, மத்திய அரசு, புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மனித வள மேம்பாட்டு துறையின், உயர் கல்வி மற்றும் இடை நிலை கல்வி பிரிவு தலைமை செயலர், சி.எஸ்.ராஜன் பிறப்பித்த உத்தரவு:நிகர் நிலை பல்கலைகள், யூ.ஜி.சி.,யின் அங்கீகாரம் பெற்று செயல்படுகின்றன. அவை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதே நேரம், மாணவர் சான்றிதழ் ஆய்வு செய்யப்படும் போது, சம்பந்தப்பட்ட பல்கலை மற்றும் பாடப்பிரிவை, யூ.ஜி.சி., அங்கீகரித்ததா என்பதை அறிய, மாநில அரசுகள் தடுமாறுகின்றன; பல்கலைகளும் சரியான ஆவணங்களை மாநில அரசுகளிடம் அளிப்பதில்லை எனவே, நிகர் நிலை பல்கலை மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டாம்; அவற்றை, யூ.ஜி.சி.,யே கவனித்து கொள்ளும் என தெரிவித்துள்ளார்

நாளை நெட் தேர்வு .

கல்லுாரி பேராசிரியர் பதவிக்கான, 'நெட்' தகுதி தேர்வு, நாடு முழுவதும், நாளை நடக்கிறது; தமிழகத்தில், 50 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர்.கல்லுாரி மற்றும் பல்கலைகளில் பேராசிரியராக சேர, 'நெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்; இல்லையெனில் பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு முடித்திருக்க வேண்டும். பெரும்பாலானோர், 'நெட்' தேர்வையே எழுதுவர்.ஆறு மாதங்களுக்கு, ஒரு முறை இந்த தேர்வு நடக்கும். இந்த ஆண்டுக்கான, இரண்டாவது, 'நெட்' தேர்வு, நாளை நடக்க உள்ளது. நாடு முழுவதும், 89 இடங்களில் உள்ள தேர்வு மையங்களில், 10 லட்சம் பேர் எழுத உள்ளனர். தமிழகத்தில், சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சியில் உள்ள தேர்வு மையங்களில், 50 ஆயிரம் பேர் விண்ணப் பித்துள்ளனர்; மூன்று தாள்களுக்கு விடையளிக்க வேண்டும்.தேர்வர்கள் தங்கள் ஹால் டிக்கெட்களை, www.cbsenet.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இப்படித் தான் இருக்கும் வினாக்கள் * நுாறு மதிப்பெண் - 60 கேள்விகள் அடங்கிய முதல் தாளுக்கு, 75 நிமிடங்கள் வழங்கப்படும். இதில், 50 கேள்விகளுக்கு மட்டுமே தேர்வு எழுத வேண்டும் * இரண்டாவது தாளுக்கும், 100 மதிப்பெண் - 50 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் * மூன்றாவது தாளுக்கு, 150 மதிப்பெண் - 70 கேள்விகளுக்குவிடைஅளிக்க வேண்டும் * 'அப்ஜெக்டிவ்' வகை வினாக்கள் வழங்கப்படும். தவறான விடைகளுக்கு,'நெகடிவ்' மதிப்பெண் குறைக்கப்படும். இந்த தாளுக்கு, இரண்டரை மணி நேரம் வழங்கப்படும்.

சி.பி.எஸ்.இ., மாதிரி வினாத்தாட்கள் வெளியீடு.

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான மாதிரி வினாத்தாளை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., வெளியிட்டு உள்ளது.மார்ச் முதல் வாரத்தில், தமிழகத்தில், சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அடிப்படையிலும், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அடிப்படையிலும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளன. இதில், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் பள்ளிக்கல்வி துறையின் பெற்றோர் ஆசிரியர் கழகம்மூலம், வினா வங்கி, கூடுதல் வழிகாட்டி புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.இதை விட ஒரு படி மேலாக, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொது தேர்வுக்கு மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆங்கிலம், ஹிந்தி, இயற்பியல், வேதியியல், கணிதம், கணிதப்பதிவியல், பொருளியல், வேளாண்மை உள்ளிட்டஅனைத்து பாடங்களுக்கும், மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன.வினாத்தாள் விவரங்களை, http://cbseacademic.in/ என்ற இணையதளத்தில் அறியலாம்.

தனியார் பள்ளிகளுக்கு மே மாத இறுதிக்குள் புதிய கல்வி கட்டணம்.

தமிழ்நாட்டில் உள்ள மெட்ரிகுலேசன், நர்சரி உள்ளிட்ட தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தை ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையிலான குழு விசாரித்து நிர்ணயித்து வருகிறது. இந்த கல்வி கட்டணம் 3 வருடம் அமலில் இருக்கும். பள்ளிக்கூட கட்டிடம், வகுப்பறை, ஆசிரியர்களின் எண் ணிக்கை, உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் அடிப்படையில் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. ஏற்கனவே கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு 3 வருட கால அவகாசம் வருகிற மே மாதம் முடிவடைகிறது. எனவே அந்த பள்ளிகளுக்கு புதிதாக கல்வி கட்டணம் நிர்ணயிக்கும் பணி வருகிற ஜனவரி மாதம் தொடங்க உள்ளது.

பள்ளிகளில் துப்புரவு பணி ஊழியர்களை நியமிக்க உத்தரவு.

அரசு பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய ரூ.750 முதல் ரூ.2 ஆயிரம் ஊதியத்தில் தற்காலிக துப்புரவு பணியாளர்களை நியமிக்க அரசுஉத்தரவிட்டுள்ளது.பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இல்லாத தால் மாணவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்வதாக புகார் எழுகிறது. இதை தடுக்கும் விதமாக ஊராட்சி ஒன்றிய, அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர்களை நியமிக்க ஊரகவளர்ச்சித்துறைஉத்தரவிட்டுள்ளது.ஊராட்சி அமைப்புகள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி தலைமைஆசிரியர்கள் கண்காணிப்பில் துப்புரவு பணியாளர்கள் செயல்படுவர். ஊராட்சி நிதியில் இருந்து சம்பளம் வழங்கப்படும்.ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசு தொடக்கப்பள்ளி துப்புரவுபணியாளருக்கு ரூ.750 மற்றும் துடைப்பம், பிளீச்சிங் பவுடர், இதரசெலவுகளுக்கு ரூ.300 வழங்கப்படும்.நடுநிலைப்பள்ளி துப்புரவு பணியாளருக்கு ரூ. 1,000, இதர செலவுக்கு ரூ.500 வழங்கப்படும். உயர்நிலைப்பள்ளி துப்புரவு பணியாளருக்கு ரூ.1,500, இதர செலவுக்கு ரூ.750, மேல்நிலைப்பள்ளி துப்புரவு பணியாளருக்கு ரூ.2,000, இதர செலவுக்கு ரூ.1,000 வழங்கப்படும்.

புதுக்கோட்டையில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கான உண்டு,உறைவிடசிறப்புப்பயிற்சி .

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ் வழியில்பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மீத்திறன் மாணவா்களை தோ்ந்தெடுத்து வருகிறஆண்டில் உயா் கல்வியினை அடையும் வகையிலும். அரசுப் பொதுத்தோ்வில் அதிகமதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதன்மையான இடத்தினை பெறும் வகையிலும்பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் புதுக்கோட்டை தூய மரியன்னைமேல்நிலைப்பள்ளியில் உண்டு உறைவிட சிறப்புப் பயிற்சி முகாம் நடந்து வருகிறது. 

இப்பயிற்சி முகாமில் கணிதம், இயற்பியல். வேதியியல். உயிரியல். மற்றும் தமிழ்,ஆங்கிலம் ஆகியப் பாடங்களுக்கு சிறந்த பாட நிபுணா்களைக் கொண்டு பயிற்சிஅளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாணவா்களின் மன அழுத்தத்தினைகுறைத்து நெறிப்படுத்துவதற்காக உளவியல் நிபுணா். மருத்துவ ஆலோசகா். உயா்கல்வியாளா்கள். ஆகியோர் கலந்துகொள்ளும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. அதன்படி இன்று 23ந்தேதி( புதன்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் மாவட்டமுதன்மைக்கல்வி அலுவலா் திருமதி செ.சாந்தி வரவேற்று பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி வருமான வரித்துறை இணைஆணையா் திரு வி.நந்தகுமார் கலந்துகொண்டு மாணவ. மாணவிகள் பன்னிரண்டாம்வகுப்புஅரசுப்பொதுத்தோ்வினை எளிதாக எதிர்கொள்ளும் முறையினை விரிவாகவும்.விளக்கமாகவும் எடுத்துக்கூறி பேசும்போது கூறியதாவது, பாடப்பகுதியினை தயார்செய்யும்போது முதலில் பாடத்தின் அவுட்லைனை நினைவில் வைத்து மூலவார்த்தைகளை(கீவோ்ட்ஸ்) குறிப்பெடுத்து படிக்கவேண்டும். மேலும் பாடப்பகுதியின்எந்தப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகிறது என்பதனையும் நீங்கள்புரிந்து படிக்கவேண்டும். அதனைத்தொடா்ந்து தோ்வு எழுதும்போது கொடுக்கப்படும்கேள்விகளுக்கு மூல வார்த்தைகள் எது என்பதை கண்டறிந்து விடை எழுத வேண்டும்.இதுமட்டுமல்லாமல் தோ்வு எழுதப் போகும்போது ஏற்படும் பயத்தினையும்.பதட்டத்தினையும் குறைக்கும் வகையில் தோ்வு தொடங்குவதற்கு சிலமணித்துளிகளுக்கு முன்பு தோ்விற்கு படிப்பதை நிறுத்திவிட்டு மனதை அமைதியாகவைத்து சில நிமிடங்கள் தியானம் செய்து உங்களது உடம்பில் உள்ள ஒவ்வொருபகுதியினையும் மேலிருந்து அதாவது தலையில் இருந்து கீழாக நினைத்துப் பார்த்துஅதன்பின் தோ்வினை எழுத தொடங்கவேண்டும். தோ்விற்கு நீங்கள் தயார் செய்யும்போதுமொத்த பாடத்தினையும் படிக்காமல் ஒவ்வொரு பாடத்தினையும் சுருக்கிகுறிப்பெடுத்துக்கொண்டு தோ்வின்போது அந்த குறிப்புகளை மீள்பார்வை செய்துதோ்வினை எழுதினால் அதிக மதிப்பெண் பெறலாம். பாலினை எவ்வாறு பதப்படுத்திவெண்ணை. நெய் எவ்வாறு பெறுகிறோமோ அதைப்போல நீங்கள் உங்களது எண்ணங்களைஒருமுகப்படுத்தி தன்னம்பிக்கையுடன் படித்தால் அரசுப் பொதுத்தோ்வில் அதிகமதிப்பெண் எடுத்து மாநிலத்திலேயே முதன்மையான இடத்தினைப் பெற்று புதுக்கோட்டைமாவட்டத்திற்கு பெருமை சோ்ப்பீா்கள் என்று நம்புகிறேன். நான் எவ்வாறுபல்வேறுஇடையூறுகளுக்கு இடையே படிக்கும் காலத்தில் பல சிறுகதவுகள் மூடினாலும்என்னுடையஅயராத முயற்சியினால் ஐ.ஆா்.எஸ் தோ்வில் முதன்மையான இடத்தினைப் பெற்று பெரியகதவான பாராளுமன்றக்கதவு திறந்து என்னை பாராட்டியதின் காரணமாக எனக்குஎப்படிநல்ல அங்கீகாரம் கிடைத்ததோ அதைப்போல நீங்களும் அயராத உழைப்பினாலும். விடாதமுயற்சியாலும் பல்வேறு இடையூறுகளை தாண்டி இந்த அரிய வாய்ப்பினை நன்குபயன்படுத்திக்கொண்டு சிறப்பாக இந்த உண்டு, உறைவிடசிறப்புப்பயிற்சி முகாமின்மூலமாக சிறப்புற கல்வி பயின்று உயா்கல்விபயின்று வாழ்க்கையில் உயா்ந்தஇலக்கினை அடையவேண்டும். அதாவது பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெறும்இப்பயிற்சியானது உங்களின் எதிர்கால உயா்கல்விக்கு மிகவும்சிறப்பானதாகும்.இவ்வாறு அவா் பேசினார். அதனைத்தொடா்ந்து அவா் சிறப்புப்பயிற்சிபெறும் ஒவ்வொரு மாணவரிடமும் சென்று மாணவா்களின் பெயா்களைக்கூறி கைகுலுக்கிஅரசுப்பொதுத்தோவில் அதிக மதிப்பெண் பெற வாழ்த்துக்கூறிய விதம் மாணவா்களிடம்மிகுந்த வரவேற்பினை பெற்றது. பின்னா் மாணவா்களின் சந்தேகங்களுக்கு சிறப்புறபதிலளித்து உற்சாகத்தினையும். தன்னம்பிகையினையும் ஏற்படுத்தினார். இந்தவழிகாட்டுதல் நிகழ்ச்சியில் புதுக்கோட்டை கல்வி மாவட்ட, மாவட்டக்கல்வி அலுவலா்திரு ப.மாணிக்கம், பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் உள்ளிட்ட பலர்கலந்துகொண்டனா்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவு: 4 மாதங்களுக்குள் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற குரூப்-1 முதல் நிலைத் தேர்வு முடிவை 4 மாதங்களுக்குள் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (டி.என்.பி.எஸ்.சி) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த பி.கார்த்திக் ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: குரூப்-1 பதவிகளுக்கு காலியாக உள்ள 74 பணியிடங்களுக்கான முதல் நிலைத் தேர்வை, டி.என்.பி.எஸ்.சி நடத்தியது.நவீன இயந்திரங்களைக் கொண்டு லட்சக்கணக்கான வினாத்தாள்களை விரைவாகதிருத்தம் செய்து, ஒரு மாதத்தில் முடிவுகளை வெளியிட முடியும். ஆனால், தேர்வு முடிவு தள்ளிப் போவதால், 30 வயதைக் கடந்தவர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, கடந்த நவம்பரில் நடைபெற்ற முதல் நிலைத் தேர்வு முடிவை ஒரு மாதத்துக்குள் வெளியிடுமாறு டி.என்.பி.எஸ்.சி}க்கு என கோரியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற முதல் நிலைத் தேர்வு முடிவை 4 மாதங்களுக்குள் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டார்.

ஜன., 5 முதல் SLAS தேர்வு.

அரசு பள்ளி ஆசிரியர் முறையாக பாடம் கற்றுக் கொடுத்தாரா என்பதை சோதிக்க, மாணவர்களுக்கு ஜன., 5 முதல் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வில், மாணவர் பெறும் மதிப்பெண்ணை வைத்தே ஆசிரியரின் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது.தமிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்ககமான,எஸ்.எஸ்.ஏ., திட்டம் மூலம், மாணவர்களுக்கு செயல் வழி கற்றலும், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது; இதற்காக, மத்திய அரசு சார்பில் பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. பயிற்சிக்கு வரும் ஆசிரியர்களுக்கு, பயணப்படி, சாப்பாடு போன்ற வசதிகளும் செய்து தரப்படுகின்றன. பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒழுங்காக பணியாற்றியுள்ளாரா, அவர் கற்றுக் கொடுத்ததால், மாணவர்கள் மேம்பட்டுள்ளனரா என, ஆண்டுதோறும் சோதனை நடத்தப்படும்.இந்தஆண்டுக்கான கற்றல் அடைவு திறன் தேர்வு, 3ம் வகுப்பு மற்றும், 5ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜன., 5 முதல் நடக்க உள்ளது. மாவட்டம், வட்டம் மற்றும் பள்ளி வாரியாக சில மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் கற்றல் அடைவு திறன் பட்டியல் தயாரிக்கப்படும். இதில், எந்த பகுதியில் மாணவர்கள் பின் தங்கியுள்ளனரோ, அந்த பகுதியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம்,எஸ்.எஸ்.ஏ., விளக்கம் கேட்கும்.

பள்ளிகளில் மூன்றாம் பருவ பாடப்புத்தகம், நோட்டுகளை ஜனவரி 2-ஆம் தேதி வழங்க தமிழக அரசு உத்தரவு.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவத்துக்கான விலையில்லாப் பாடப்புத்தகம், நோட்டுகளை ஜனவரி 2-ஆம் தேதி வழங்க அரசு உத்தரவிட்டது.தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை இரண்டாம்பருவத் தேர்வுகளுக்கானப் பாடங்கள் நடத்திமுடிக்கப்பட்டுள்ளன. மழைவெள்ளம் காரணமாக, நவம்பரில் நடத்தப்பட வேண்டிய அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரியில் நடத்தப்படவுள்ளன. இந்த வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத்துக்கானப் பாடங்கள் ஜனவரி முதல் நடத்தப்பட வேண்டும். இதையடுத்து அரசு சார்பில் வழங்கப்படும் விலையில்லாப் பாடப் புத்தகங்களும், நோட்டுகளும் மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சென்னையில் இருந்து டிசம்பர் 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதிக்குள் அனைத்துப் பாடப் புத்தகம், நோட்டுப் புத்தகங்களும் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பிவைக்கப்படும். அவற்றை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் மூலம் பள்ளிகளுக்கு ஜனவரி 1-ஆம் தேதியே அனுப்பிவைக்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மீலாது நபி, கிறிஸ்துமஸ் விடுமுறை நிறைவடைந்து, ஜனவரி 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்போது மாணவ, மாணவியரிடம் மூன்றாம் பருவத்துக்கான விலையில்லாப் பாடப் புத்தகம், நோட்டுகள் இருக்க வேண்டும் என மாநிலக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்திய ரயில்வேயில் 18252 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

இந்திய ரயில்வேயில் Goods Guard, Clerk, Typist,Station Master போன்ற தொழில்நுட்பம் அல்லாத 18252 பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் 2016 வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Indicative advt..03/2015 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Commercial Apprentice காலியிடங்கள்: 703 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200 பணி: Traffic Apprentice சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200 சம்பளம்: மாதம் ரூ. பணி: Enquiry-Cum- Reservation-Clerk காலியிடங்கள்: 127 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800 பணி: Goods Guard காலியிடங்கள்: 7591 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800 பணி: Junior Accounts Assistant-Cum-Typist காலியிடங்கள்: 1205 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800 பணி: Senior Clerk-Cum-Typist காலியிடங்கள்: 869 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800 பணி: Asst Station Master காலியிடங்கள்: 5942 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800 பணி: Traffic Asst காலியிடங்கள்: 166 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800 பணி: Senior Time Keeper காலியிடங்கள்: 04 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000 வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். அனைத்து இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பு சலுகையில் தளர்வு வழங்கப்படும். தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (விரிவான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை பார்க்கவும்) தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. தாழ்த்தப்பட்டோர், பழங்கிடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் முறை: http;//www.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ வெளியிடப்படும் தேதி: 26.12.2015 ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 26.12.2015 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.01.2016

மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் பள்ளிகளில் துப்புரவு பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் தொடக்கக்கல்வித் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறையின் கீழும் செயல்பட்டு வருகின்றன. இங்கு பல இலட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால் பள்ளியை துப்பரவு செய்யவோ, கழிப்பிடங்களை சுத்தம் செய்யவோ பணியாளர்கள் பணி அமர்த்தப்படவில்லை. இதனால் ஆசிரியர்களும், மாணவர்களும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இது குறித்து ஆசிரியர்கள் பல காலமாக அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இதன் விளைவாக உள்ளாட்சி துறையில் உள்ள பணியாளர்களை சுழற்சி அடிப்படையில் பயன்படுத்திக்கொள்ள அரசு உத்தரவிட்டது. இதற்கு உள்ளாட்சி துறை பணியாளர்கள் சரியாக ஒத்துழைக்காததால் ஆசிரியர் அமைப்புகள் நிரந்தர பணியாளர்களை அரசே நியமிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கடந்த நவம்பர் 30 அன்று பள்ளிகளில் துப்புரவு பணியாளர்களை நியமித்துக்கொள்ள நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து டிசம்பர் 18 அன்று கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பள்ளிகளின் வகைக்கேற்ப நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நிதியானது மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒதுக்காமல் பள்ளிகளின் வகைக்கேற்ப ஒதுக்கியுள்ளதால் அதிக மாணவர் எண்ணிக்கையுள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் பாதிக்கப்படும். எனவே மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் நிதி ஒதுக்கிட வேண்டும் என ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்டத்தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்டப்பொருளாளர் குமரேசன் ஆகியோர் கூறியதாவது. அரசு பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என்ற எங்களது நீண்ட நாள் கோரிக்கையின் பயனாக தமிழக அரசு தற்பொழுது நிதி ஒதுக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு எங்கள் அமைப்பின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். இதில் தொடக்கப்பள்ளிகளுக்கு ஒரு மாதத்திற்கு துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியமாக ரூ750ம், தூய்மை செய்யும் பொருட்கள் வாங்க ரூ300ம் என மொத்தம் ரூ1050 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதைப்போல நடுநிலைப்பள்ளிகளுக்கு துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியமாக ரூ1000ம், தூய்மை செய்யும் பொருட்கள் வாங்க ரூ500ம் என மொத்தம் ரூ1500ம், உயர்நிலைப்பள்ளிகளுக்கு ரூ1500 உடன் ரூ750 சேர்த்து மொத்தம் ரூ2250 எனவும், மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ2000த்துடன் ரூ1000 சேர்த்து மொத்தம் ரூ3000 என ஒதுக்கீட செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளை வகைப்படுத்தி நிதி ஒதுக்கியிருப்பதால் அதிக மாணவர் எண்ணிக்கை கொண்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு போதிய நிதி இல்லாமல் இப்பணியினை மேற்கொள்வதில் மீண்டும் தலைமையாசிரியர்கள் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். எனவே பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிதி ஒதுக்க வேண்டும் என எங்கள் அமைப்பின் சார்பில் கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

மாணவர்களுக்கான ஆளுமை பயற்சி.

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான அகம் ஐந்து ,புறம் ஐந்து என்ற தலைப்பில் ஆளுமை தன்மை வளர்க்கும் பயற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு வந்தவர்களை ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .மதுரை நிகில் அமைப்பின் மண்டல பயற்சியாளர் தயானந்தன் மாணவர்களுக்கு ஆளுமை தன்மை வளர்க்கும் பயற்சி அளித்தார்.அகம் ஐந்து என்கிற தலைப்பில் அன்பு செலுத்துதல்,பொறுப்புணர்வு,ஒற்றுமை,நேர்மை,பிறர் நிலையில் இருந்து பார்த்தல் என்கிற 5 பண்புகள் தொடர்பாகவும்,புறம் 5 என்கிற தலைப்பில் கவனித்தல் ,பாராட்டுதல்,ஆழமான சிந்தனை,ஆக்க சிந்தனை ,கோபத்தை கையாளுதல் என்கிற 5 பண்புகள் தொடர்பாகவும் மாணவர்கள் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் , பல்வேறு விளையாட்டு முறையின் மூலமாகவும் எடுத்து விளக்கினார் ..மாணவ,மாணவியரை பல குழுக்களாக பிரித்து அவர்களுக்குள் ஒரு தலைவரை தேர்ந்தெடுத்து அதன் மூலம் பயிற்சி அளித்தார்.குழுக்களுக்குள் எவ்வாறு ஒற்றுமையை கொண்டு வருவது என்பதை செயல்கள் மூலம் செய்து நேரடியாக விளக்கம் அளித்தார்.அடுத்தவர் நிலையை உணர்ந்து கொள்ளுதல் சார்பாக படங்களும் போட்டு காண்பிக்கப்பட்டது.பெற்றோர்கள் எவ்வாறு கஷ்டப்பட்டு பிள்ளைகளை வளர்க்கிறார்கள் என்பதும் தெளிவாக சில படங்களின் வழியாக காண்பிக்கப்பட்டது.இதனை பார்த்த பெருவாரியான மாணவியர்கள் தங்கள் அம்மாவும் இது போல்தானே கஷ்டப்பட்டு நம்மை படிக்க வைக்கின்றனர் என்று கண்ணீர் விட்டு அதன் அர்த்தத்தை புரிந்து அழுதனர்.இனிமேல் நாங்கள் அம்மா,அப்பா சொல்வதை நன்றாக கேட்போம் என்று உறுதி எடுத்து கொண்டனர்.ஆளுமை தன்மை தொடர்பாக சக்தி,முத்தழகி,செந்தில்,நந்தகுமார்,காயத்ரி,முனீஸ்வரன் உட்பட பல மாணவ,மாணவியர் சந்தேகங்களை கேட்டு பதில் பெற்றனர்.பயிற்சியின்போது பல்வேறு மாணவ,மாணவியர் இது வரை தாங்கள் தெரியாமல் பொய் சொன்னது உண்டு என்றும் இனிமேல் பொய் சொல்ல மாட்டோம் என்றும் நல்ல செயல்களையே செய்வோம் என்றும் பேசினார்கள்.நிறைவாக ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.

ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்க: ராமதாஸ்

ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும். காலியாக இருக்கும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளைக் கொண்டு அரசு நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் அரசு கடைபிடித்து வரும் அணுகுமுறை சமூக நீதிக்கு எதிராக இருப்பதுடன், ஆசிரியர் கல்வி படித்தோரின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அரசே வாய்ப்புகளை பறிப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் தான் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். அது தான் சிறந்த நடைமுறையாகும். இந்த முறையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் சிறந்த தலைமுறையை உருவாக்கினர். 2011-ஆம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சியில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு தகுதித் தேர்வும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு போட்டித் தேர்வும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தகுதித் தேர்வில் வெற்றி பெற 60% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று அரசு நிபந்தனை விதித்திருந்ததால், 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தகுதித் தேர்வில் பங்கேற்ற 7 லட்சம் பேரில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவானோர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மற்ற மாநிலங்களில் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு குறைவான தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் தகுதி மதிப்பெண்களை குறைக்க வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தினர். அதன் பயனாக தகுதி மதிப்பெண்களை 55% ஆக குறைத்த தமிழக அரசு, நியமன நடைமுறையிலும் மாற்றம் செய்தது. அதுவரை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் நியமிப்பது தான் நடைமுறையாக இருந்தது. ஆனால், வெயிட்டேஜ் மதிப்பெண் என்ற புதிய முறையை தமிழக அரசு அறிமுகம் செய்தது. அதன்படி தகுதித் தேர்வு மதிப்பெண்ணில் 60% மட்டும் எடுத்துக் கொள்ளப்படும். அத்துடன் பட்டப்படிப்பு, ஆசிரியர் கல்விப் படிப்பு ஆகியவற்றில் எடுத்த மதிப்பெண்களில் தலா 15%, 12 ஆம் வகுப்புத் தேர்வில் எடுத்த மதிப்பெண்களில் 10% சேர்த்து தரவரிசை தயாரிக்கப்படும் என்றும் அந்த வரிசைப்படி தான் ஆசிரியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் 2013 ஆம் ஆண்டில் தமிழக அரசு புதிய ஆணை பிறப்பித்தது. இந்த ஆணை தான் லட்சக்கணக்கானோரின் ஆசிரியர் பணி கனவை அடியோடு கலைத்திருக்கிறது. தகுதித் தேர்வில் கிடைக்கும் மதிப்பெண் என்பது அனைவருக்கும் பொதுவானது. தகுதித் தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்பட்டு ஒரே மாதிரியாக மதிப்பீடு செய்யப்படுகிறது. ஆனால், வெயிட்டேஜ் மதிப்பெண் அப்படிப்பட்டதில்லை. 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மற்றும் பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகளில் மதிப்பீடு செய்யும் முறை கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் மாற்றம் கண்டிருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன் விடையில் ஒவ்வொரு எழுத்தாக பார்த்து தான் மதிப்பீடு செய்யப்படும். இதனால் அப்போது 80% மதிப்பெண்கள் எடுப்பதே பெருஞ்சாதனையாக இருந்தது. ஆனால், இப்போது 100% மதிப்பெண் எடுப்பதென்பது சர்வசாதாரணமாக மாறி விட்டது. இதனால் கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர்கள் நியமனத்தின் போது தகுதித் தேர்வில் 150க்கு 85 மதிப்பெண் எடுத்த பலருக்கு அவர்கள் 12 ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண் எடுத்திருந்ததால் எளிதாக வேலை கிடைத்து விட்டது. அதேநேரத்தில் தகுதித் தேர்வில் 120 மதிப்பெண் எடுத்த பலருக்கு, பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் எடுத்த மதிப்பெண் குறைவாக இருப்பதால் ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட பட்டதாரிகளில் பெரும்பான்மையானோர் 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பட்டப்படிப்பை முடித்தவர்கள் ஆவர். தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி 84.84 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருக்கிறார்கள். இவர்களில் 3.97 லட்சம் பேர் வெயிட்டேஜ் மதிப்பெண் வரம்புக்குள் வரக்கூடிய பட்டதாரி ஆசிரியர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலானோர் 15 ஆண்டுகளுக்கு முன்பே பட்டம் பெற்றவர்கள். ஏற்கனவே 40 வயதைக் கடந்து நிரந்தர வேலையில்லாமல் தவிக்கும் இவர்களால் தகுதிகாண் மதிப்பெண் முறை இருக்கும் வரை ஆசிரியர்கள் ஆக முடியாது. இதற்கெல்லாம் மேலாக வெயிட்டேஜ் மதிப்பெண் என்பது இயற்கை நீதிக்கும், சமூக நீதிக்கும் எதிரானது ஆகும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த முறை கடைபிடிக்கப்படவில்லை. வெயிட்டேஜ் மதிப்பெண் முறை காரணமாக தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற சுமார் 75,000 பட்டதாரி ஆசிரியர்கள் வேலை கிடைக்காமல் தவிக்கின்றனர். எனவே, சமூக நீதியை காக்கும் வகையில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்து காலியாக இருக்கும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளைக் கொண்டு அரசு நிரப்ப வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளுக்கு நாளை முதல் ஜனவரி 1 வரை விடுமுறை.

மீலாது நபி, கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர். சிறப்பு வகுப்புகள்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய வெள்ளம் பாதித்த நான்கு மாவட்டங்களில் பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன; இந்தச் சிறப்பு வகுப்புகளை பள்ளிகள் டிசம்பர் 24, 25, 27 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் மட்டும் நடத்தக் கூடாது என்றும் மற்ற நாள்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளிகளைத் தூய்மைப்படுத்த உத்தரவு: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மழையால் சேதமடைந்த பள்ளிகளில் டிசம்பர் 26 முதல் 31 வரையிலான விடுமுறை நாள்களில் தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. வகுப்பறைகளிலும், வகுப்பறைகளைச் சுற்றிலும் பிளீச்சிங் பவுடரைத் தெளித்தும், தேவைப்பட்டால் தினக்கூலி பணியாளர்களை அமர்த்தியும் பள்ளிகளைச் சுத்தப்படுத்த வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 மாணவர்களின் தேர்ச்சியை அதிகரிக்க 10 லட்சம் கையேடு .

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர்,கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 மாணவ–மாணவிகளுக்கு 10 லட்சம் கையேடுகள் இந்த வாரத்திற்குள் விலை இன்றி வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது.மாணவர்களுக்கு கையேடுகள்சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில்சமீபத்தில் பெய்த மிக கனமழை காரணமாக வரலாறு காணாத வகையில் பெரிய அளவில் வெள்ளச்சேதம் ஏற்பட்டது. தொடர்ந்து மழையின் காரணமாக 33 நாட்களுக்கு மேலாக பள்ளிகளுக்கு விடுமுறைவிடப்பட்டது.எனவே மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக மேற்கண்ட அந்த 4 மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 மாணவ–மாணவிகளுக்கு கற்றலில் குறைபாடு வரக்கூடாது என்பதற்காக அவர்களின் தேர்ச்சியை அதிகரிக்க கையேடு வழங்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.அச்சடிக்கும் பணிஇதையொட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் கையேடுகள் தயாரிக்கும் பணியை செய்து முடித்தது. எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ஒரே கையேடுவும், பிளஸ்–2 மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் பாடங்களுக்கு ஒரே கையேடுவும், வேதியியல், இயற்பியல், கணிதம், உயிரியல் முதலிய பாடங்களுக்கு கையேடுகள் தனியாகவும் வழங்கப்பட உள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகள் அனைவருக்கும் விலை இன்றி வழங்கப்பட உள்ளன. மொத்தத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கையேடுகள் வழங்கப்பட இருக்கிறது. தற்போது கையேடுகள் அச்சடிக்கும் பணி அரசு அச்சகத்தில் நடைபெற்று வருகிறது. விலை இன்றி வழங்கப்பட உள்ள அந்த கையேடுகளை படித்தால் கண்டிப்பாக நல்ல தேர்ச்சி விகிதம் இந்த மாவட்டங்களில் இருக்கும் என்று கருதப்படுகிறது.இந்த வார இறுதிக்குள் கிடைக்க ஏற்பாடுஇந்த கையேடுகள் எப்போது வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதாவிடம் கேட்டதற்கு அவர் பதில் அளிக்கையில், ‘மாணவர்கள் நலன் கருதி கையேடு அச்சடிக்கப்படுகிறது.இந்த வார இறுதிக்குள் கையேடு வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது’ என்றார்.

மாநில அளவிலான 58-வது குடியரசுதின தடகளப்போட்டிகள் நடந்தது.

மாநில அளவிலான 58-வது குடியரசுதின தடகளப்போட்டிகள் கோயம்புத்தூா் மாவட்டத்தில் உள்ள நேரு விளையாட்டரங்கில் 2015 டிசம்பா் 18,19, 20 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. துவக்க விழா நிகழ்ச்சியில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் திரு கே.சி.வீரமணி, மாண்புமிகு நகராட்சி, ஊரக வளா்ச்சி, சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைத்துறை அமைச்சா் திரு.எஸ்.பி.வேலுமணி, மாண்புமிகு சட்டப்பேரவைத் துணைத்தலைவா் திரு பொள்ளாட்சி வ. ஜெயராமன், மாண்புமிகு கோயம்புத்தூா் மாநகராட்சி மேயா் திரு கணபதி ப.ராஜ்குமார், கோயம்புத்தூா் மாவட்ட ஆட்சித்தலைவா் திருமதி அா்ச்சனா பட்நாயக் இ.ஆ.ப, பாராளுமன்ற உறுப்பினா்கள். சட்டமன்ற உறுப்பினா்கள் திரு ஆா். துரைச்சாமி(எ) சேலஞ்சா் துரை, திரு வி.சி. ஆறுகுட்டி, திரு தா. மலரவன் உள்ளிட்ட சான்றோர்கள் பலா் கலந்துகொண்டனா். விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநா் முனைவா் ச.கண்ணப்பன் வரவேற்று பேசினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயம்புத்தூா் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் முனைவா் நா.அருள்முருகன் சிறப்பாக செய்திருந்தார். இப்போட்டிகளில் சென்னை. கோயம்புத்தூா், கடலூா், திண்டுக்கல். ஈரோடு, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட 16 மண்டலங்களைச் சோ்ந்த பல்வேறு மாவட்டங்களில் இருந்து விளையாட்டு விடுதிகள். பள்ளிகளைச் சோ்ந்த சுமார் 2400 விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். பல்வேறு வயதுக்கேற்ப வெவ்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகள் நடைபெற்ற இரண்டாம் நாளில் பணி ஓய்வு பெற்ற காவல்துறை உயா்அலுவலர் திரு தேவாரம், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிறைவு விழாவில் கோயம்புத்தூா் மாவட்ட கருவூலத்துறை அலுவலா் திரு ஆா். அருணாச்சலசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பரிசளிப்பு விழாவில் முதன்மை உடற்கல்வி ஆய்வா்(ஆண்கள்) முனைவா் எஸ்.எஸ்.பீட்டா்சுப்புரெட்டி, முதன்மை உடற்கல்வி ஆய்வா்(பெண்கள்) திரு எம்.கலைச்செல்வன் மற்றும் பலா் கலந்துகொண்டனா் வெற்றி பெற்ற மாணவ, மாணவியா்களுக்கு பரிசு கோப்பைகளும், சான்றிதழ்களும். ரொக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன.

CTET தேர்வு - வின்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 28

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு! நாட்டிலுள்ள சி.பி.எஸ்.இ., ஆரம்ப நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், ஆசிரியராக பணிபுரிவதற்கான தகுதித்தேர்வே ’சென்ட்ரல் டீச்சர் எலிஜிபிலிட்டி டெஸ்ட்’ (சி.டி.இ.டி.,). எந்தெந்த பள்ளிகள்? மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஆசிரியர்களை நியமிப்பதற்கு, மத்திய அரசின் மனித வள அமைச்சகத்தின் சார்பாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (சி.பி.எஸ்.இ.,) ஆசிரியர் தகுதி தேர்வானது (சி.டி.இ.டி.) நடத்தப்படுகிறது. இருநிலைத் தேர்வு இரண்டு தேர்வு தாள்களை கொண்ட சி.டி.இ.டி., தேர்வில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆசிரியராக பணிபுரிய விரும்புபவர்கள் முதல் தாளையும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியராக பணிபுரிய விரும்புபவர்கள் இரண்டாம் தாளையும் எழுத வேண்டும். ஆரம்பப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி இரண்டிலும் (1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை) ஆசிரியர் ஆக பணியாற்ற விரும்புவோர் இரு தேர்வு தாள்களையும் எழுத வேண்டும். கல்வித் தகுதி ஆரம்ப வகுப்புகளான ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு பிளஸ் 2வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டுகள் கொண்ட, ‘டிப்ளமோ இன் எலிமெண்டரி எஜூகேஷன்’ படிப்பை முடித்திருக்க வேண்டும். 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு, ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், ‘டிப்ளமோ இன் எலிமெண்டரி எஜூகேஷன்’ படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் பி.எட்., பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். தேர்வு விவரம் தேர்வு நாள்: பிப்ரவரி 21, 2016 தாள் 1: ஆரம்பப் பள்ளி (1முதல் 5ம் வகுப்பு) ஆசிரியர்களுக்கான தேர்வு, பகல் 2 மணி முதல் 4.30 மணி வரை. தாள் 2: நடுநிலைப் பள்ளி (6 முதல் 8ம் வகுப்பு) ஆசிரியர்களுக்கான தேர்வு, காலை 9.30 முதல் 12 மணி வரை. இடஒதுக்கீடுப் பிரிவில் உள்ளோருக்கு 5 சதவீதம் தளர்வு அளிக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் முறை: இத்தேர்வுக்கு www.ctet.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். வின்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 28 மேலும் விவரங்களுக்கு: www.ctet.nic.in

புவியியல்‬ சிறப்புப்‬ பெயர்கள்‬

1. இருண்ட கண்டம்,வளரும் கண்டம்=ஆப்ரிக்கா 2. வானவில் நாடு=தென் ஆப்ரிக்கா 3. முத்துக்களின் நகரம்=பஹ்ரைன் 4. கிராம்புத்தீவு=மடகாஸ்கர் 5. இந்தியாவின் டெட்ராய்டு=சென்னை 6. இந்தியாவின் நுழைவுவாயில்=மும்பை 7. இந்தியாவின் மான்செஸ்டர்=மும்பை 8. தமிழகத்தின் குட்டி ஜப்பான்=சிவகாசி 9. ஐந்து நதிகள் நாடு=பஞ்சாப் 10. கோயில் நகரம்=மதுரை 11. பொற்கதவு நகரம்=சான்பிரான்சிஸ்கோ 12. வங்காளத்தின் துயரம்=தாமோதரர் ஆறு 13. நீல மலைகள்=நீலகிரி மலைகள் 14. அரண்மனை நகரம்=கல்கத்தா 15. ஏழு குன்றுகளின் நகரம்= ரோம் 16. வெள்ளை நகரம்= பெல்கிரேடு 17. மஞ்சள் நதி=ஹவாங்கோ 18. தெற்கு இங்கிலாந்து=நியூசிலாந்து 19. இந்தியாவின் பூந்தோட்டம்=பெங்களூர் 20. விஞ்ஞானிகளின் சொர்க்கம்=அண்டார்ட்டிகா 21. புனித நகரம்=பாலஸ்தீனம் 22. கங்காருவின் நாடு= ஆஸ்திரேலியா 23. ஆயிரம் ஏரிகள் நாடு= பின்லாந்து 24. வெள்ளை யானைகள் நாடு=தாய்லாந்து 25. அரபிக்கடலின் ராணி=கொச்சின் 26. உலகத்தினா கூரை=திபெத் 27. பீகாரின் துயரம்=கோசி 28. நறுமணபொருள் பூமி= கேரளா 29. ஐரோப்பாவின் நோயாளி=துருக்கி 30. உலகத்தின் சர்க்கரைக்கிண்ணம்= கியூபா 31. கிழக்கு கடற்கரையின் வெனிஸ்=கொச்சின் 32. வடக்கு கடற்கரையின் வெனிஸ்=ஸ்டாக்ஹோம் 33. இந்தியாவின் மான்செஸ்டர்=கோயம்புத்தூர் 34. இடியோசை நாடு= பூட்டான் 35. தங்க ரத நாடு= மியான்மர் 36. இந்தியாவின் சுவிட்சர்லாந்து=காஷ்மீர் 37. நடு இரவில் சூரியன் உதிக்கும் நாடு=நார்வே.

அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இலவச வை-ஃபை வசதி.

அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் வை-ஃபை வசதி ஏற்படுத்தி தரப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.தகவல் தொழில்நுட்ப துறை மூலம் கல்வி என்ற திட்டத்தின் கீழ் இந்தவசதி ஏற்படுத்தி தரப்படும் என மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார். மக்களவையில் எழுத்துபூர்வமாக வெளியிட்ட அறிக்கையில், அலகாபாத் பல்கலைக்கழகம், வடகிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஏற்கெனவே இந்த வசதி செய்யப்பட்டுள்ளது என்ற அமைச்சர் மீதமுள்ள 38 மத்திய பல்கலைக்கழங்களிலும் ரூ. 335.85 கோடி செலவில் வை-ஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்றார்.

10 ஆம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு .

10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 29 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மிலாது நபி விடுமுறை காரணமாக, 10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள், தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானதனித்தேர்வர்கள், வரும் 24 ஆம் தேதி வரை அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் மூலமாக ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது, 24 ஆம் தேதியன்று மிலாது நபியை முன்னிட்டு அரசு விடுமுறை அளித்துள்ளது.எனவே, தனித்தேர்வர்கள், சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் சேவை மையங்களில் வரும் 29 ஆம் தேதி வரை தொடர்ந்து ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து பாதுகாக்க டிஜிலாக்கர் அறிமுகம்.

இனி எந்த ஆவணத்தையும் கையில் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டியது இல்லை, நகலும் தேவை இல்லை, இந்திய அரசு டிஜிலாக்கர் என்ற புதிய மின்பூட்டு ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.ஆதார் அட்டை எண் உள்ள அனைவரும் www.digitallocker.gov.in என்ற தளத்திற்குள் சென்று,தங்களது கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், 10, 12 மற்றும் பட்டச் சான்றிதழ்கள், வருமானவரிக் கணக்கு அட்டை (பான் கார்டு) மின் கட்டண அட்டை போன்ற சான்றிதழ்களைப் பதிவுசெய்து கொள்ள வேண்டும்.அதன்பிறகு நீங்கள் ஏதேனும் ஒரு அரசுத்துறைக்கு விண்ணப்பித்தால். மேற்கண்ட சான்றிதழ்கள் எதையும் தாக்கல் செய்ய வேண்டியது இல்லை. பதிலாக உங்கள் ஆதார் அட்டை எண்ணை மட்டும் கொடுத்தால் போதும். அவர்கள் சரிபார்த்துக் கொள்வார்கள். இந்தத் திட்டம் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டது.

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு .

01.01.2015 நிலவரப்படி 2015/16 ல் காலியாக உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு முன்னுரிமைப்பட்டியலில் உள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு1 முதல் 530 வரை உள்ள நபர்களுக்கு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக ஏற்கனவே பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் பல மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள காரணத்தால் கூடுதலாக 80 முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 591 முதல் 611 வரை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்.

பிளஸ் 2 தனித்தேர்வு எழுதியவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை முதல் விநியோகம் செய்யப்படுகிறது. இவர்கள் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொண்டிருந்தனர். இந்த நிலையில், இவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வு எழுதிய மையங்களில் டிசம்பர் 23 முதல் ஜனவரி 8 வரை விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த நாளுக்குப் பின்னர் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் பெறலாம்

வி.ஏ.ஓ. தேர்வு தேதி மாற்றம்:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தனது 12.11.2015 நாளிட்ட அறிவிக்கை மூலம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பதவிக்கான நேரடி நியமனத்திற்கு தேர்வாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதற்கான இணையவழி விண்ணப்பங்கள் பதிவு செய்ய இறுதி நாள் பெருமழை மற்றும் அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக 14.12.2015-ல் இருந்து 31.12.2015 என்று மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து பிப்ரவரி 14-ந்தேதி நடக்கவிருந்த தேர்வு அதே மாதம் 28-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புத்தகங்களை இழந்த தனியார் பள்ளி மாணவர்கள் இணையதளம் மூலம் பெறலாம் தமிழ்நாடு பாடநூல் கழகம் அறிவிப்பு .

தனியார் பள்ளி மாணவர்கள் புத்தகங்களை இழந்திருந்தால், இணையதளம் மூலம் பதிவுசெய்து வீட்டு முகவரியிலேயே புத்தகங்களை பெறலாம் என தமிழ்நாடு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் கூறியிருப்பதாவது: சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக பாடநூல்களை இழந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேவையான பாடநூல்கள், சம்பந்தப் பட்ட துறைத்தலைவர்கள் மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. சுயநிதிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பாடநூல்களை இழந்திருந்தால் அவர்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் ‘www.textbookcorp.in’ என்ற இணையதளம் வழியாக பதிவுசெய்து, வீட்டு முகவரியிலேயே பாடநூல்களை பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தின் வட்டார அலுவலகங்களிலும் போதுமான புத்தகங்கள் உள்ளன. இது தவிர தனியார் பள்ளிகள் கூடுதல் பாடநூல்கள் கோரினால், ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி இணையவழி சேவையை பயன்படுத்தி உடனுக்குடன் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தேர்வு தேதி நீடிப்பு

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தேர்வு (NMMS)தேதி நீடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பு

நடைபெறவுள்ள 2015 NMMS தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகை தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் www.tndge.in என்ற இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய 14.12.2015 முதல் 24.12.2015 வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC NEWS | உதவிப் பொறியாளர் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்தி குறிப்பு - நெடுஞ்சாலைத் துறையில், 2011-2015-ஆம் ஆண்டிற்கான 213 உதவிப் பொறியாளர் (கட்டிடவியல்) காலிப்பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்யும்பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 21.07.2015-ஆம் நாளிட்ட அறிவிக்கையின் வாயிலாக விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியிருந்தது.

     மேற்காணும் பதவிக்கான எழுத்துத் தேர்வு 06.09.2015 அன்று நடைபெற்றது. மேற்படி தேர்வில் நேர்காணலுக்கு தற்காலிகமாக தேர்வு பெற்ற 424 விண்ணப்பதாரர்கள் அவர்களது விண்ணப்பத்தில் தெரிவித்த விவரங்களைச் சரிபார்க்கும்பொருட்டு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.  மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்வரும் 28.12.2015 முதல் 30.12.2015 வரை சென்னை பிரேசர் பாலச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

     மேற்படி நேர்காணலுக்கு தேர்வுபெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பாணை விரைவு அஞ்சல் மூலம்     அனுப்பப்பட்டுள்ளது.  அழைப்பாணை விவரம் (Notice of Certificate Verification) தேர்வாணையத்தின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  விண்ணப்பதாரர்கள், மேற்படி அழைப்பாணையினை தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்தும் (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பாணையினை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு குறுஞ்செய்தியும், மின்னஞ்சலும் தேர்வுபெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  அழைக்கப்பட்டோர் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள  நாட்களில் சான்றிதழ் சரிபார்ப்பில் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

     ஒதுக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு கலந்துகொள்ளத் தவறும் விண்ணப்பதாரர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படாது என்றும் அவர்கள் அடுத்தகட்ட பரிசீலனைக்கும் கருதப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.