நிகர் நிலை பல்கலை மாணவர் சான்றிதழ் சரிபார்ப்பை யூ.ஜி.சி செய்யும்.

நிகர் நிலை பல்கலை மாணவர் சான்றிதழ் சரிபார்ப்பை, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டாம்; பல்கலை மானிய குழுவான, யூ.ஜி.சி., பார்த்து கொள்ளும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் படிக்க செல்லும் அல்லது பணிக்கு செல்லும் மாணவர் சான்றிதழ்களை, சரிபார்க்கும் பணி, மாநில அரசுகளின் அயல்நாடு விவகாரத் துறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், 'நிகர் நிலை பல்கலைகளின் சான்றிதழ், மாநில அரசுகளால் சரியாக ஆய்வு செய்யப்படவில்லை. சான்றிதழின் உண்மை தன்மை குறித்த அறிக்கை, தாமதமாக கிடைக்கிறது' என, புகார் எழுந்துள்ளது. இதனால், பல நேரங்களில், போலி சான்றிதழ் வருவதாக வெளிநாட்டு நிறுவனங்கள் கூறுகின்றன. இந்த பிரச்னையை தீர்க்க, மத்திய அரசு, புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மனித வள மேம்பாட்டு துறையின், உயர் கல்வி மற்றும் இடை நிலை கல்வி பிரிவு தலைமை செயலர், சி.எஸ்.ராஜன் பிறப்பித்த உத்தரவு:நிகர் நிலை பல்கலைகள், யூ.ஜி.சி.,யின் அங்கீகாரம் பெற்று செயல்படுகின்றன. அவை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதே நேரம், மாணவர் சான்றிதழ் ஆய்வு செய்யப்படும் போது, சம்பந்தப்பட்ட பல்கலை மற்றும் பாடப்பிரிவை, யூ.ஜி.சி., அங்கீகரித்ததா என்பதை அறிய, மாநில அரசுகள் தடுமாறுகின்றன; பல்கலைகளும் சரியான ஆவணங்களை மாநில அரசுகளிடம் அளிப்பதில்லை எனவே, நிகர் நிலை பல்கலை மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டாம்; அவற்றை, யூ.ஜி.சி.,யே கவனித்து கொள்ளும் என தெரிவித்துள்ளார்

Comments