பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமன தேர்வில் மோசடி: ஆசிரியர் தேர்வுவாரிய அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு


பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமன தேர்வில் மோசடி: ஆசிரியர் தேர்வுவாரிய அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு | விரிவுரையாளர் நியமன தேர்வில் மோசடி நடந்தது தொடர்பாக, சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வுவாரிய அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்கள், அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்கள் ஆகியவற்றை நிரப்ப தகுதியானவர்களை தேர்ந்து எடுக்கக்கூடியது ஆசிரியர் தேர்வு வாரியம். இந்த ஆசிரியர் தேர்வு வாரியம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள 10 மாடி கட்டிடத்தில் இயங்குகிறது. ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம் 1,058 பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிந்த பிறகு வினா-விடை வெளியிடப்பட்டது. தேர்வு முடிவு கடந்த வருடம் நவம்பர் மாதம் 7-ந் தேதி வெளியிடப்பட்டது. அந்த தேர்வில் மதிப்பெண் குளறுபடி நடந்துள்ளது என்று சிலர் கடிதம் மூலம் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரிகள் விசாரித்ததில், மோசடி நடந்தது உண்மை என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த முடிவுகள் அனைத்தும் திரும்ப பெறப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த டிசம்பர் 11-ந்தேதி அறிக்கை விடப்பட்டது. மேலும் யார் யார் இந்த மோசடியில் உடந்தை என்று தெரிய போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். இதையொட்டி ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு யார் வேண்டுமானாலும் போகலாம். ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு யார் சென்றாலும் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரிக்கிறார்கள். யார் நீங்கள்? யாரை பார்க்கப்போகிறீர்கள்? என்ன விஷயம்? என்று கேட்டுவிட்டு அங்கு வைத்திருக்கும் நோட்டுபுத்தகத்தில் பெயரை எழுதி விட்டுத்தான் செல்லவேண்டும் என்று கூறுகிறார்கள். பலரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உள்ளே செல்ல போலீசார் அனுமதிப்பதில்லை.

Comments