கல்வி வழிகாட்டி உதவி மையத்திற்கு அழைப்புகள் குவிகின்றன

கல்வி வழிகாட்டி உதவி மையத்திற்கு அழைப்புகள் குவிகின்றன அமைச்சர் செங்கோட்டையன் அவ்வப்போது அதன் செயல்பாடுகளை கேட்டறிகிறார் கல்வி வழிகாட்டி உதவி மையத்துக்கு வரும் அழைப்புகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்குபவர்களை படத்தில் காணலாம். சென்னை, மார்ச்.3- மாணவர்கள் மற்றும் பெற்றோர் கல்வி வழிகாட்டும் உதவி மையத்தை தொடர்புகொள்ளும் அழைப்புகள் குவிகின்றன. அமைச்சர் செங்கோட்டையன் அவ்வப்போது அதன் செயல்பாடுகள் பற்றி கேட்கிறார். 24 மணி நேர கல்வி வழிகாட்டி உதவி மையம் (ஹெல்ப்லைன்) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. டி.பி.ஐ. வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்த மையத்தை உடனடியாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பார்வையிட்டார். இந்த மையத்தை தொலைபேசியில் இலவசமாக அழைக்கலாம். கல்வி தொடர்பான எந்த சந்தேகம் இருந்தாலும் அதற்கு பதில் அளிக்க ஒரே நேரத்தில் 7 பேர் இருக்கிறார்கள். 24 மணி நேரமும் செயல்படுவதால் 3 ஷிப்டுகளில் 21 பேர் பணிபுரிகிறார்கள். முதல் நாளில் இங்கு 4,500 அழைப்புகள் வந்தன. அடிக்கடி கேட்கும் அமைச்சர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எத்தனை அழைப்புகள் வந்திருக்கிறது என்று கேட்டு ஆர்வமாக தெரிந்துகொள்கிறார். மேலும் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவும் அவ்வப்போது இதுபற்றி கேட்கிறார். துறை இயக்குனர் ரெ.இளங்கோவன் அவ்வப்போது மையத்தை பார்வையிடுகிறார். இந்த மையம் தகவல், வழிகாட்டுதல், உளவியல் ஆலோசனை ஆகிய மூன்றுவித சேவைகளை செய்கிறது. மாவட்டந்தோறும் பள்ளிகள், நூலகங்கள், புத்தகங்கள், நலத்திட்ட உதவிகள், உதவித்தொகை, சிறப்பு பயிற்சி மையங்கள் பற்றி கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படுகின்றன. வழிகாட்டுதல் பற்றிய கேள்விகளுக்கு குறிப்பாக, 10-வது படிப்பவர்கள் அடுத்து எந்த குரூப்பை எடுத்து படிக்கலாம் என்றும், 12-வது படிக்கும் மாணவர்கள் உயர்கல்வியில் என்ன படித்தால் உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கேட்பதற்கும் உரிய பதில் அளிக்கப்படுகிறது. உளவியல் ஆலோசனையும் வழங்கப்படுகிறது. அந்த மையத்திற்கு வரும் அழைப்புகளும், அதற்கு அளிக்கும் பதில்கள் குறித்தும் அங்கு பணிபுரியும் சிலரிடம் கேட்டபோது கூறியதாவது:- சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற விரும்புகிறேன், அதற்கு என்ன பாடம் எடுக்க வேண்டும் என்று ஒருவர் கேட்டார். அதற்கு நீங்கள் விரும்பும் பாடம் எடுக்கலாம் என்றோம். மருத்துவ படிப்பு வேண்டாம், மருத்துவம் சார்ந்த வேறு படிப்பு படிக்க விரும்புகிறேன். படித்தால் வேலை கிடைக்குமா? என்று ஒருவர் கேட்டார். மருத்துவம் சார்ந்த ஆய்வுக்கூட தொழில்நுட்ப பிரிவினர் உள்ளிட்ட பல படிப்புகளை தெரிவித்தோம். பிளஸ்-2 தேர்வில் முதல் தாள் நன்றாக எழுதவில்லை என்று பிளஸ்-2 மாணவி ஒருவர் கண்ணீருடன் கூறினார். அழாதீர்கள் என்று கூறி, தமிழ் 2-வது தாள் மற்றும் இதர தேர்வுகளை நன்றாக எழுத உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டது. ஒரு பெற்றோர் கூறுகையில், ஆண்கள் பள்ளியில் எனது மகன் படிக்கிறான் என்றும் கழிப்பறை வசதி இல்லாததால் டிரான்ஸ்பார்மர் அருகே மாணவர்கள் சிறுநீர் கழிக்கிறார்கள். இதனால் மின்சாரம் தாக்கி மாணவர்கள் பலியாக வாய்ப்பு உள்ளது, அதை தவிர்க்க வேண்டும் என்று கூறினார். உடனடியாக பள்ளி கல்வித்துறைக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மற்றொரு பெற்றோர் தெரிவிக்கையில், ஒரு பள்ளியில் கழிப்பறையில் தண்ணீர் வசதி செய்யவில்லை என்றார். உடனே அந்த பள்ளிக்கு கழிப்பறையில் தண்ணீர் வசதி துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு பெற்றோர், தனது மகனுக்கு தேர்வின்போது வினாத்தாள் வாங்கியதும் படித்தது எல்லாம் மறந்துபோவதாக கூறினார். அந்த மாணவருக்கு எது மறந்துவிடுமோ அதை அடிக்கடி எழுதிப்பார்ப்பது நல்லது. எந்த பாடம் மனதில் நிற்கவில்லையோ அதை செல்போனில் பதிவு செய்து மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்றோம். கல்வியில் பின்தங்கி இருக்கும் மாணவர்களும் முதல் மாணவராக வரவேண்டும், அதற்கு தான் இந்த மையம். திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து பிளஸ்-1 படிக்கும் மாணவர் ஒருவர், தனக்கு தேர்வு பயம் உள்ளது என்றும், வினாத்தாளை வாங்கியதும் கை நடுங்கும் என்றும் கூறினார். அவருக்கு உரிய உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டது. பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர் ஒருவர் பேசுகையில், நான் வங்கி அதிகாரியாக அல்லது என்ஜினீயராக விரும்புகிறேன். அதற்கு என்ன பாடத்தை எடுத்து படிக்கலாம் என்றார். அதற்கு, நீங்கள் வங்கி அதிகாரியாக பணியாற்ற பி.காம். அல்லது வங்கி தொடர்பான படிப்பை எடுத்து படிக்கலாம். அரசு துறைகள், பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இஸ்ரோ நிறுவனத்திலும் மற்றும் போட்டித்தேர்வுகளிலும் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு நிறைய வேலைவாய்ப்பு உள்ளது. எனவே என்ஜினீயரிங் எடுத்தும் படிக்கலாம் என்றோம். பிளஸ்-2 தேர்வு நடைபெற்று வருவதால், தேர்வுக்கு முந்தைய நாளில் அந்த தேர்வுக்கு தயாராவது குறித்து ஆசிரியர்களை பதில் அளிக்கவைக்கவும் ஆலோசனை நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த மையத்தில் நேற்று இரவு 8 மணி வரை 5 ஆயிரத்து 594 அழைப்புகள் வந்தன. தொடர்ந்து அழைப்பு வந்துகொண்டே இருக்கின்றது. ஒரு மாணவி தேர்வு சம்பந்தமாக அதிகாலை 4 மணிக்கு கேள்வி கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று (சனிக்கிழமை) முதல் ஹெல்ப்லைன் மையத்திற்கு ஆசிரியரும் வருகிறார். அவர் அடுத்த நாள் நடக்கும் பிளஸ்-2 தேர்வு தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கிறார்.

Comments