மருத்துவ மேற்படிப்புக்கு அரசு டாக்டர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கும் அரசாணை ரத்து ஐகோர்ட்டு உத்தரவு

மருத்துவ மேற்படிப்புக்கு அரசு டாக்டர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கும் அரசாணை ரத்து ஐகோர்ட்டு உத்தரவு | மருத்துவ மேற்படிப்பில் சேருவதற்கு அரசு டாக்டர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவது தொடர்பான தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மருத்துவ மேற்படிப்பில் சேர தொலை தூரப்பகுதி மற்றும் எளிதில் அணுக முடியாத மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு 10 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. 2018-19-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, அரசு டாக்டர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் எந்தெந்த பகுதிகள் தொலைதூர பகுதிகள், எவை எளிதில் அணுக முடியாத மலைப்பகுதி பகுதிகள் என்பதை வகைப்படுத்தி தமிழக அரசு கடந்த மார்ச் 23-ந் தேதி ஒரு அரசாணையைப் பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி அரசு டாக்டர்கள் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்யநாதன் விசாரித்தார். அப்போது மனுதாரர்கள் தரப்பு வக்கீல்கள், ‘புவியியல் அமைப்பின் அடிப்படையில் மருத்துவ சேவைகள் எளிதில் சென்றடைய இயலாத பகுதிகளைத்தான் எளிதில் அணுக முடியாத, தொலைதூர பகுதிகளாக அறிவிக்க வேண்டுமே தவிர, டாக்டர்களின் எண்ணிக்கை மற்றும் காலியிடங்களின் அடிப்படையில் அவற்றை வகைப்படுத்தக்கூடாது. தமிழக அரசின் இந்த அரசாணையால் நகர்புறங்களில் பணியாற்றும் டாக்டர்களுக்குத்தான் அதிக பலன் தரும். அதனால், இந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும்’ என்று வாதிட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘இந்த அரசாணைப்படி எந்தெந்த பகுதிகள் தொலைதூர பகுதிகள், எளிதில் அணுகமுடியாத பகுதிகள் மற்றும் மிகவும் பின்தங்கிய பகுதிகள் என்பது புவியியல் அமைப்பின் அடிப்படையில் வகைப்படுத்தப்படவில்லை. அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏ, பி, சி. பிரிவுகளின் அடிப்படையில் நகர்ப்புறங்களில் உள்ளவர்களுக்குத்தான் இதன்மூலம் அதிக பயன் கிடைக்கும். தகுதியுள்ளவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் கிடைக்காது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்கிறேன்” என உத்தரவிட்டுள்ளார்.

Comments