விடைத்தாள்கள் திருத்த ஆசிரியர்களை அனுப்பாத மெட்ரிக் பள்ளிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்படும் தேர்வுத்துறை எச்சரிக்கை

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
விடைத்தாள்கள் திருத்த ஆசிரியர்களை அனுப்பாத மெட்ரிக் பள்ளிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்படும் தேர்வுத்துறை எச்சரிக்கை | விடைத்தாள்களை திருத்த ஆசிரியர்களை மெட்ரிக் பள்ளி நிர்வாகம் அனுப்பிவைக்காவிட்டால் அந்த பள்ளிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி எச்சரித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- விடைத்தாள் திருத்தும் பணி பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் முகாம்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டு மதிப்பீட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஒரு சில மாவட்டங்களில் மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்களை பள்ளி நிர்வாகம் விடைத்தாள் திருத்தும் முகாம்களுக்கு அனுப்பாமல் உள்ளனர். மேல்நிலை பொது தேர்வுகளுக்கு அதிக அளவில் மாணவர்களை அனுப்பும் மெட்ரிக் பள்ளிகள், விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. தார்மீக கடமை இதனால் விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. விடைத்தாள் திருத்தும் பணியானது ஆசிரியர்களின் தார்மீக கடமை ஆகும். எனவே அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்களும் தங்கள் பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புக்கு பாடம் நடத்துவதில் 2 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஆசிரியர்களை மதிப்பீட்டு முகாம்களுக்கு உடனே அனுப்பி வைக்க வேண்டும். ஆசிரியர்களும் தங்களுக்கு பள்ளியில் வழங்கப்பட்ட நியமன உத்தரவை பெற்று மதிப்பீட்டு முகாம்களுக்கு செல்ல வேண்டும். நிறுத்தி வைக்கப்படும் அவ்வாறு முகாம் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பி வைக்காத மெட்ரிக் பள்ளிகளின் தேர்வு முடிவுகள் கண்டிப்பாக வெளியிடப்பட மாட்டாது. தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments