இன்று (05.06.2018) ரேண்டம் எண் ஒதுக்கீடு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் இன்று (செவ்வாய்க்கிழமை) கணினி மூலம் ஆன்லைனில் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர 1 லட்சத்து 59,631 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 8-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களின் மதிப்பெண் கட்-ஆப் மதிப்பெண்ணுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட்-ஆப் மதிப்பெண் எடுக்கும் சூழலில் கலந்தாய்வின்போது யாருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் ரேண்டம் எண் (சமவாய்ப்பு எண்) கணினி மூலம் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு இன்று கணினி மூலம் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், முதன்மைச் செயலர் சுனில் பாலிவால், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விவேகானந்தன், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சுரப்பா ஆகியோர் முன்னிலையில் ஆன்லைனில் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

Comments