1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புதிய வண்ணத்தில் சீருடை கைத்தறி துறை அமைச்சர் தகவல்

நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புதிய வண்ணத்தில் சீருடைகள் வழங்கப்பட உள்ளன. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் கைத்தறி, துணி நூல் துறை அமைச்சர் தாக்கல் செய்த கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கும் திட்டம் 1985-86 முதல் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2012-13 முதல் ஆண்டுக்கு 4 ஜோடி சீருடைகள் வழங்கப்படுகின்றன. இலவச சீருடை திட்டத்துக்கு தேவையான துணிகள், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. 2018-19 கல்வியாண்டில் விலையில்லா சீருடை திட்டத்தை, தொடர்ந்து செயல்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய வண்ணத்திலான சீருடைகளை வழங்குவதற்கும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அக்வா க்ரீன் மற்றும் மெடோ க்ரீன் வண்ணத்திலும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு லைட் பிரவுன் மற்றும் மெரூன் வண்ணத்திலும் சீருடைகள் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments