குரூப்-1 போட்டித்தேர்வுக்கான வயது உச்சவரம்பு உயர்வு சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவிப்பு

குரூப்-1 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் பங்குபெறுவதற்கான வயது உச்சவரம்பினை உயர்த்தி 110-விதியின் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என். பி.எஸ்.சி.) நடத்தும் குரூப்-1 தேர்வு மூலம் வருவாய் கோட்டாட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிக வரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், கூட்டுறவு சங்க துணை பதிவாளர், மாவட்ட பத்திரபதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, தீயணைப்பு கோட்ட அதிகாரி ஆகிய பதவிகளுக்கு நேரடி பணி நியமனம் செய்யப்படுகிறது. பல கடினமான கேள்விகளை கொண்ட குரூப்-1 தேர்வில் வெற்றி பெறுவது சவாலுக்குரியது. பலரின் கனவாக இருக்க கூடிய குரூப்-1 தேர்வு எழுத நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் குரூப்-1 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் பங்குபெறுவதற்கான வயது உச்சவரம்பு உயர்த்தப்படுவதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று 110-விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டு பேசியதாவது:- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற குரூப்-1 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் பங்குபெறுவதற்கான வயது உச்சவரம்பினை உயர்த்திடுமாறு பல்வேறு தரப்பினரிடம் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. அதன் அடிப்படையில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு உள்ள வயது உச்சவரம்பினைப் போல, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-1, 1-ஏ, 1-பி பணியிடங்களுக்கு தற்போதுள்ள எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி. மற்றும் டி.என்.சி. பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 35-லிருந்து 37 ஆகவும், இதர பிரிவினருக்கு தற்போதுள்ள வயது உச்சவரம்பு 30-லிருந்து 32 ஆகவும் உயர்த்தப்படுகிறது. இவ்வாறு அந்த அறிவிப்பில் அவர் கூறினார்

Comments