‘நீட்’ தேர்வு முடிவுகள் வெளியீடு தேசிய அளவில் 12-ம் இடம் பெற்று சென்னை மாணவி சாதனை

‘நீட்’ தேர்வு முடிவுகள் வெளியீடு தேசிய அளவில் 12-ம் இடம் பெற்று சென்னை மாணவி சாதனை மருத்துவம் படிக்க நாடு முழுவதும் 7.14 லட்சம் பேர் தகுதி பெற்றனர் | நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. மருத்துவம் படிக்க நீட் தேர்வு எழுதியவர்களில் 7.14 லட்சம் பேர் (56 சதவீதம்) தகுதி பெற்றுள்ளனர். மாணவி கே.கீர்த்தனா தேசிய அளவில் 12-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஆயுர்வேதா, யோகா, இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ் - AYUSH) படிப்புகள் மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்பவர்களுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. 2018-19ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 6-ம் தேதி நடந்தது. 11 மொழிகளில் நீட் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய நீட் தேர்வு நாடு முழுவதும் தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளில் 136 நகரங்களில் 2,255 மையங்களில் நடத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நாமக்கல், சேலம், திருநெல்வேலி, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நகரங்களில் 170 மையங்களில் தேர்வு நடந்தது. நாடு முழுவதும் 5,80,649 மாணவர்கள், 7,46,075 மாணவிகள் 1 திருநங்கை என மொத்தம் 13,26,725 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதில் 5,53,849 மாணவர்கள், 7,16,072 மாணவிகள், 1 திருநங்கை என மொத்தம் 12,69,922 பேர் தேர்வு எழுதினர். 56,803 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. தடை கோரி வழக்கு நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி (இன்று) வெளியிடப்படுவதாக சிபிஎஸ்இ ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதற்கிடையில் நீட் தேர்வுக்கான தமிழ் வினாத்தாளில் இடம்பெற்றிருந்த 49 கேள்விகளில் 69 பிழைகள், தவறான மொழிபெயர்ப்பு ஆகியவை இருந்ததால், தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கத் தொடங்கியது. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வின் முடிவுகள் ஒருநாள் முன்னதாக, ஜூன் 4-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ நேற்று காலையில் தெரிவித்தது. ஆனால், அதற்கும் முன்னதாக பகல் 12.30 மணிக்கே www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் நீட் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டது. 7.14 லட்சம் பேர் தகுதி தேர்வு எழுதியவர்களில் 3,12,399 மாணவர்கள், 4,02,162 மாணவிகள், 1 திருநங்கை என மொத்தம் 7,14,562 பேர் (56 சதவீதம்) மருத்துவம் படிக்க தகுதி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 16.49 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டுபோலவே இந்த ஆண்டும், 56 சதவீத பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். பிஹார் மாணவி முதலிடம் நீட் தேர்வில் முதல் 50 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளின் பட்டியலை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 36 மாணவர்கள், 14 மாணவிகள் இடம்பெற்றுள்ளனர். பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த கல்பனா குமாரி என்ற மாணவி மொத்தம் உள்ள 720 மதிப்பெண்ணில் 691 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ரோகன் புரோஹித் என்ற மாணவன் 690 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், டெல்லியைச் சேர்ந்த ஹிமான்ஸ் சர்மா என்ற மாணவன் 690 மதிப்பெண் பெற்று 3-ம் இடமும் பிடித்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த கே.கீர்த்தனா என்ற மாணவி 676 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 12-ம் இடம் பிடித்தார். பொதுப் பிரிவில் 6,34,897 பேர் 691 முதல் 119 மதிப்பெண்கள் வரை (50 பெர்சன்டைல்), ஓபிசி பிரிவில் 54,653 பேர் 118 முதல் 96 மதிப்பெண் வரை (40 பெர்சன்டைல்), எஸ்சி பிரிவில் 17,209 பேர் 118 முதல் 96 மதிப்பெண் வரை (40 பெர்சன்டைல்), எஸ்டி பிரிவில் 7,446 பேர் 118 முதல் 96 மதிப்பெண்கள் வரை (40 பெர்சன்டைல்) பெற்றுள்ளனர். மாற்றுத் திறனாளிகளைப் பொறுத்தவரை பொதுப் பிரிவில் 205 பேர் 118 முதல் 107 மதிப்பெண்கள் வரை (45 பெர்சன்டைல்), ஓபிசி பிரிவில் 104 பேர் 106 முதல் 96 மதிப்பெண்கள் வரை (40 பெர்சன்டைல்), எஸ்சி பிரிவில் 36 பேர் 106 முதல் 96 மதிப்பெண்கள் வரை (40 பெர்சன்டைல்), எஸ்டி மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 12 பேர் 106 முதல் 96 மதிப்பெண்கள் வரை (40 பெர்சன்டைல்) பெற்றுள்ளனர். தமிழகத்தில் 39 சதவீதம் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த 1,20,000 பேரில், 1,14,602 பேர் தேர்வு எழுதினர். இதில் 45,336 பேர் (39 சதவீதம்) தகுதி பெற்றுள்ளனர். தமிழ் மொழியில் தேர்வு எழுத மட்டும் 24,720 பேர் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. ஒரு திருநங்கை வெற்றி நாடு முழுவதிலும் இருந்து ஒரே ஒரு திருநங்கை மட்டும் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தார். அவர் இத்தேர்வில் தகுதி பெற்றுள்ளார். கடந்த ஆண்டில் 8 திருநங்கைகள் எழுதியதில் 5 பேர் தகுதி பெற்றனர்.

Comments