நிகர்நிலைப் பல்கலை. மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் சேர்க்கைக்கு ரூ.13 லட்சம் மட்டுமே கட்டணம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் சேர்க்கைக்கு கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் வரை ரூ.13 லட்சம் மட்டுமே வசூலிக்க வேண் டும் என்று உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜவஹர்லால் சண்முகம் என்பவர் தாக் கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்தில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிக ளில் சேரும் மாணவர்களிடம் ஆண்டுக்கு கட்டணமாக ரூ.18 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை, டிப்ளமா, சிறப்பு மருத்துவம், பல் மருத்துவம் போன்றவற்றுக்கு எவ்வளவு கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுபோல, தமிழகத்தில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளுக்கும் உரிய கட்டணம் நிர்ணயிக்க யுஜிசிக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரி யிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா அமர்வில் நடந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறி ஞர் எம்.வேல்முருகன் ஆஜராகி வாதிட்டார். அப்போது நீதிபதிகள், ‘‘நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது தொடர்பாக கல்விக் கட்டண நிர்ணயக் குழுவை யுஜிசி ஜூன் 30-க்குள் அமைக்க வேண்டும். அந்தக் குழு 6 வாரங்களுக்குள் கட்டணத்தை நிர்ணயம் செய்து அதுதொடர்பான அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதுவரை தமிழகத்தில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகள் ஆண்டுக்கு கல்விக் கட்டணமாக ரூ.13 லட்சம் மட்டுமே வசூலிக்க வேண்டும். ஒருவேளை கட்டணக் குழு நிர்ணயிக்கும் தொகை இதைவிட அதிக மாக இருந்தால் அதை மாணவர்கள் செலுத்த வேண்டும். தொகை ரூ.13 லட்சத்துக்கு குறைவாக இருந்தால் கல்லூரி நிர்வாகம் மீதித் தொகையை திருப்பி அளிக்க வேண் டும்’’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத் தனர்.

Comments