அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 1,320 பேருக்கு மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியலில் இடம்

மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 1,320 பேர் இடம் பிடித்து இருக்கின்றனர். மருத்துவ படிப்பில் சேர அரசு பள்ளிகளில் படித்த 409 பேர் விண்ணப்பித்ததில் 390 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கின்றன. அதேபோல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 991 பேர் விண்ணப்பித்ததில், 930 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, 1,320 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தரவரிசை பட்டியலில் இடம் கிடைத்து இருக்கின்றது. தரவரிசைப்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடம்பிடித்து இருப்பவர்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு:- 1 முதல் 1,000 வரையிலான தரவரிசையில் 4 பேரும், 1,001 முதல் 3,000 வரையிலான தரவரிசையில் 8 பேரும், 3,001 முதல் 5,000 வரையிலான தரவரிசையில் 16 பேரும், 5,001 முதல் 10,000 வரையிலான தரவரிசையில் 76 பேரும், 10,001 முதல் 15,000 வரையிலான தரவரிசையில் 157 பேரும், 15,001 முதல் 25,419 வரையிலான தரவரிசையில் 1,059 பேரும் இடம் பிடித்துள்ளனர். இதில் முதல் 3 நிலைகளில் இடம்பிடித்து இருப்பவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகளவில் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments