1,6,9, 11-ம் வகுப்பு பாடத்திட்டம் தொடர்பாக அனைத்து ஆசிரியர்களுக்கும் பிரத்யேக வழிகாட்டி புத்தகம் ஒரு வாரத்தில் வழங்க ஏற்பாடு

1,6,9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு எளிதாக சொல்லிக்கொடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு ஒரு வாரத்தில் பிரத்யேக வழிகாட்டி புத்தகம் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளி பாடத்திட்டம் இந்த ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 1,6,9,11-ம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டில் (2018-2019) புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டில் இருந்து இதர வகுப்புகளுக்கு படிப்படியாக புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். 1,6,9,11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு எளிதாக சொல்லிக்கொடுக்கும் வகையில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் மூலமாக 2 வார காலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. முதலில் மாநில அளவில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்து அதன்பிறகு அவர்கள் மூலமாக மாவட்டம், வட்டார அளவில் பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதுடன் புதிய பாடங்களை மாணவர்களுக்கு எளிதாகவும், சுவாரசியமாகவும் சொல்லிக்கொடுக்கும் வகையில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் பிரத்யேக வழிகாட்டி புத்தகத்தை (Teacher Hand Book) உருவாக்கியுள்ளது. இப்புத்தகம் 1,6,9,11-ம் வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

Comments