பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றவருக்கு பிளஸ் 1-ல் சேர்க்கை மறுக்க கூடாது மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் எச்சரிக்கை

பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றதை காரணம் காட்டி, அந்த மாணவர்களுக்கு அதே பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் சேர்க்கை மறுக்கக் கூடாது என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 10-ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றதை காரணம் காட்டி, பிளஸ் 1-ல் அதே பள்ளி யில் சேர்க்கை மறுப்பதை தவிர்க்க வேண்டும். 10-ம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் பயின்றவர்களுக்கு பிளஸ் 1 வகுப்பு சேர்க்கையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் அதேபோல, பிளஸ் 1-ல் குறைந்த மதிப்பெண் பெற்றது மற்றும் சில பாடங்களில் தோல்வியுற்ற காரணங்களைக் காட்டி, மாணவர்களின் மாற்றுச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறு பெற்றோரை பள்ளி நிர்வாகங் கள் வற்புறுத்துவதாக புகார்கள் வருகின்றன. இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே, மாற்றுச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளுமாறு பெற்றோரை நிர்பந்திக்கக் கூடாது. பிளஸ் 1-ல் தோல்வியுற்ற மாணவர்களையும், தொடர்ந்து பிளஸ் 2 வகுப்பில் பயில அனுமதித்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து தேர்வில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இந்த சுற்றறிக்கையை அனைத்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் அனுப்ப வேண்டும். புகார்கள் ஏதேனும் வந்தால் அவற்றின் மீது உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments