பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் 28-ம் தேதி வெளியீடு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 28-ம் தேதி வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. 1 லட்சத்து 78 ஆயிரம் இடங்கள் இங்கு வழங்கப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் இந்த ஆண்டு நிரப்பப்பட உள்ளன. இதில் சேர ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு ஜூன் 5-ம் தேதி ஆன்லைன் மூலமாக ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டது. பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதை கருத்தில்கொண்டு சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 8 முதல் 14-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 42 மையங்களில் நடத்தப்பட்டது. அதில் கலந்துகொள்ள இய லாத மாணவர்களுக்கு மட்டும் அண்ணா பல்கலைக்கழக மையத்தில் கூடுதலாக 3 நாட்கள் (17-ம் தேதி வரை ) சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. இதைத்தொடர்ந்து, அடுத்த கட்ட நிகழ்வான தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணியில் அண்ணா பல்கலைக்கழகம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தரவரிசைப் பட்டியல் ஜூன் 28-ம் தேதி வெளி யிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 28-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 8.30 மணிக்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நுழைவுத்தேர்வு மையத்தில் வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார். தரவரிசைப் பட்டியல் வெளியீட்டைத் தொடர்ந்து ஆன்லைன் கலந்தாய்வை ஜூலை முதல் வாரத்தில் தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட் டுள்ளது.

Comments