ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 2-வது நாளாக உண்ணாவிரதம் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

பழைய பென்சன் திட்டத்தை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் நேற்று சென்னையில் 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். ஜாக்டோ-ஜியோ போராட்டம் பழைய பென்சன் திட்டத்தை கொண்டுவரவேண்டும். 7-வது ஊதியக்குழுவில் மறுக்கப்பட்ட 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னை எழிலகத்தில் கடந்த 11-ந் தேதி காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கி உள்ளனர். உண்ணாவிரத்தில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மு.சுப்பிரமணியன், அ.மாயவன், க.மீனாட்சிசுந்தரம், இரா.தாஸ், செ.முத்துசாமி, வெங்கடேசன், அன்பரசு, தாமோதரன், சுரேஷ், செய்தி தொடர்பாளர் கு.தியாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் தொடரும் என்று அவர்கள் அறிவித்து உள்ளனர். 2-வது நாளாக தொடரும் போராட்டம் நேற்று 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் உண்ணாவிரத பந்தலிலேயே தூங்கினார்கள். நேற்று காலையிலும் அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். உண்ணாவிரதம் இருந்த நிதி காப்பாளர் மோசஸ், அங்கன்வாடி பணியாளர் டெய்சி ஆகியோர் திடீரென மயக்கம் அடைந்து கீழே சரிந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஸ்டாலின் பார்த்தார் உண்ணாவிரதம் இருந்தவர்களை தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- “பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினரை உடனடியாக முதல்-அமைச்சர் நேரில் அழைத்துப் பேசி, அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்“ போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிர்வாகிகளை சந்தித்து அவர்களிடத்திலே நான் சொன்னேன், இந்த ஆட்சி இருக்கிற வரையில் நீங்கள் வைக்கக்கூடிய கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேறப்போவது இல்லை. விரைவில், தமிழகத்திலே உங்கள் ஆதரவோடு மலர இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வருகிற போது உங்களுடைய கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று சொல்வதை விட அது நிறைவேற்றப்படும் என்ற அந்த உறுதியை நான் தந்திருக்கிறேன். வாபஸ் பெறவேண்டும்... அதுமட்டுமல்ல, எவ்வளவோ போராட்ட வியூகங்கள் இருக்கிறது. ஆனால், தங்கள் உடலை வருத்திக்கொண்டு இந்த உண்ணாவிரத போராட்டத்தை நீங்கள் தொடர்ந்து நடத்திட வேண்டுமா? அதை இன்றோடு முடிக்கக்கூடாதா? என்ற கோரிக்கையை நான் எடுத்து வைத்திருக்கிறேன். அந்த கோரிக்கையை அவர்கள் நிச்சயமாக பரிசீலிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். இதுகுறித்து சட்டமன்றத்தில் நான் பேசுவேன். இவ்வாறு அவர் கூறினார். எம்.எல்.ஏ.க்களுக்கு மாமூல் அப்போது அவரிடம் நிருபர்கள் ‘தமிழகத்திலே அடுத்தடுத்து கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. இதற்கு எப்பொழுதுதான் முற்றுப்புள்ளி வைக்கப்படும்? என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:- இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்கள் மக்கள் பிரச்சினையைப்பற்றி கவலைப்படுவதில்லை. இதனால் எல்லா தரப்பு மக்களுமே இன்றைக்கு இந்த ஆட்சியிலே பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த ஆட்சியிலே இருக்கக்கூடியவர்களை பொருத்தவரைக்கும் ஆட்சியை எப்படி தக்க வைத்துக்கொள்வது, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொடர்ந்து எப்படி மாமூல் தந்து அவர்களை தங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்வது என்பதிலே தான் அவர்கள் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்களே தவிர, மக்களைப் பற்றி அவர்கள் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||