நீட் தேர்வில் தோல்வியடைந்த செஞ்சி மாணவி தற்கொலை

பேச்சுவார்த்தையின்போது மாணவி பிரதீபாவின் தாயார் அமுதா மயங்கி விழுந்தார். அவருக்கு, தண்ணீர் கொடுத்து உதவிய திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி. மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான சண்முகம் என்பவரின் மகள் பிரதீபா(18). இவர் கடந்த 2016-2017ம் கல்வியாண்டில், கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று, பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1,125 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மருத்துவப் படிப்பில் சேர்ந்து பயில கடந்தாண்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வை எழுதினார். அத்தேர்வில் 159 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்தும், அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கவில்லை. எனவே அவர் மீண்டும் நீட் தேர்வெழுத திட்டமிட்டு, ஓராண்டாக தீவிர முயற்சி எடுத்துப் படித்து வந்தார். அதன்படி இந்தாண்டு நீட் தேர்வு எழுதினார். அதன் முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. அதில், பிரதீபா கடந்த ஆண்டைவிட மிகக் குறைவாக, அதாவது 39 மதிப்பெண் பெற்றுள்ளார். இதனால் மனமுடைந்த பிரதீபா நேற்று முன்தினம் மாலை எலி மருந்து சாப்பிட்டுள்ளார். இதனை தாமதமாக அறிந்த அவரது பெற்றோர், நேற்று முன்தினம் இரவு அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரதீபா உயிரிழந்தார். இது குறித்து வளத்தி காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இறந்த மாணவி பிரதீபாவின் சகோதரர் பொறியியலும், சகோதரி எம்எஸ்சியும் படித்து வருவது குறிப்பிடத்தக்கது. போராட்டம், கைது இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், பிரதீபாவின் குடும்பத்துக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற 3 கோரிக்கைகளை வலியுறுத்தி செஞ்சி எம்எல்ஏ மஸ்தான் தலைமையில் திமுகவினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தொடர்ந்து நடந்ததால், எம்எல்ஏ மஸ்தான் உள்ளிட்ட 100 பேரை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து நடைபெற்ற பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து, 3 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பிரதீபாவின் பெற்றோர் ஆட்சியர் கந்தசாமியிடம் மனு அளித்தனர். பின்னர், பிரதீபாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ உட்பட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஸ்டாலின் அஞ்சலி மாணவி பிரதீபாவின் உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், எம்எல்ஏ டிடிவி தினகரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பிரதீபாவின் குடும்பத்தினரிடம் ஸ்டாலின் ரூ.2 லட்சம் நிதி வழங்கினார். இதைத் தொடர்ந்து பிரதீபாவின் உடலுக்கு நேற்று இரவு இறுதிச் சடங்கு நடைபெற்றது. மற்றொருவர் தற்கொலை முயற்சி இதேபோன்று, செஞ்சி அருகே மேல்சேவூர் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர், பொதுத் தேர்வில் 958 மதிப்பெண் பெற்றுள்ளார். இதை தொடர்ந்து நீட் தேர்வு எழுதிய அவர், அதில் 44 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் மனமுடைந்து நேற்று முன்தினம் மாலை பூச்சி மருந்து குடித்துள்ளார். மாணவியின் பெற்றோர் அவரை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செஞ்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||