ஆயுஷ் படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் விரைவில் தொடக்கம்

சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வில் விலக்கு கோரி அரசு கடிதம் விண்ணப்ப விநியோகம் விரைவில் தொடக்கம் சி.கண்ணன் சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் மீண்டும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதேபோல இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ் - AYUSH) படிப்புகளுக்கும் இந்த ஆண்டுமுதல் நீட் தேர்வு மூலமாகவே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் கடந்த ஆண்டே அறிவித்தது. இதை நினைவுபடுத்தும் விதமாக மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதையடுத்து, ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு 2 முறை கடிதம் எழுதியது. ஆனால், இதுகுறித்து மத்திய அரசு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையில் கடந்த மே மாதம் சென்னை வந்த மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபத் யெசோ நாயக், “ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு, தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலத்திடம் இருந்தும் ஆயுஷ் அமைச்சகத்துக்கு கோரிக்கை வரவில்லை. நீட் தேர்வு கட்டாயம் என்பதை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன” என்று தெரிவித்தார். 3-வது முறை கடிதம் இந்த நிலையில், நீட் தேர்வு நடந்து முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தேசிய அளவிலான கலந்தாய்வு தொடங்கி நடந்து வருகிறது. தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்க உள்ளது. இதேபோல ஆயுஷ் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் ஜூலை மாதத்தின் முதல் அல்லது 2-வது வாரத்தில் தொடங்க உள்ளது. மாணவர் சேர்க்கை இந்நிலையில், ‘ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஆயுஷ் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும்’ என்று தமிழக அரசு சார்பில் 3-வது முறையாக மத்திய அரசுக்கு கடந்த வாரம் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும்படி 2 முறை கடிதம் எழுதப்பட்டது. எந்த பதிலும் வரவில்லை. அதனால், ஆயுஷ் படிப்புகளில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. கடைசி முயற்சியாக, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதப்பட்டுள்ளது” என்றனர்.

Comments