தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் வெளியீடு நாமக்கல் மாணவி முதல் இடம்; கோவைக்கு 3-ம் இடம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்கீழ், தமிழகம் முழுவதும் 14 உறுப்பு கல்லூரிகளும், 26 இணைப்புக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் பிஎஸ்சி வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு ஊட்டச்சத்து மற்றும் உணவு முறையியல், வேளாண் வணிக மேலாண்மை, பட்டுப்புழு வளர்ப்பு, பிடெக். வேளாண்மைப் பொறியியல்,ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் உள்ளிட்ட பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்படிப்புகளின் முதலாம் ஆண்டில் உறுப்புக் கல்லூரிகளில் 1,262 இடங்களும், இணைப்புக் கல்லூரிகளில் 2,160 இடங்களும் என மொத்தம் 3,422 இடங்கள் உள்ளன. இதற்காக கடந்த மே18-ம் தேதி முதல் ஜூன் 17-ம் தேதி இரவு 11.59 மணி வரை www.tnau.ac.in/admission.html என்ற வேளாண்மை பல்கலைக்கழக இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 32, 561 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக கடந்த 18, 19 மற்றும் 20-ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெற்றது. நேற்று காலை 10 மணிக்கு துணைவேந்தர் கே.ராமசாமி தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இளநிலை பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 200 கட்-ஆப் மதிப்பெண் பெற்ற நாமக்கல் மாணவி எஸ்.என்.ஆர்த்தி முதலிடம் பிடித்தார். 199.67 கட்-ஆப் மதிப்பெண் பெற்று கொடுமுடி மாணவி ஸ்ரீகார்த்திகா 2-வது இடத்தையும், 199.5 கட்-ஆப் மதிப்பெண் பெற்று கோவை மாணவி எம்.மேக்னா 3-வது இடத்தையும் பெற்றனர். இந்த ஆண்டு முதல்முறையாக ஒற்றைச்சாளர முறையில், ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறுகிறது. வரும் ஜூலை 7-ம் தேதி சிறப்புப் பிரிவினருக்கும், 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறும். 16-ம் தேதி தொழிற்கல்வி பிரிவுக்கும், 17 மற்றும் 18-ம் தேதிகளில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் தொழில்துறையினருக்கும் கலந்தாய்வு நடைபெறும். 2-ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெறும். ஆகஸ்ட் 1-ம் தேதி கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கும் என்றார். அப்போது டீன் எஸ்.மகிமைராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Comments