மாணவர்களுக்கு ஆன்லைனில் தற்காலிக புரவிஷனல் சான்றிதழ் சென்னை பல்கலை.யில் அறிமுகம்

பட்டப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் தற்காலிக புரவிஷனல் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியை பல்கலைக்கழகம் ஜூலை 1-ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளதாக துணைவேந் தர் பி.துரைசாமி தெரிவித்தார். சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் நேற்று நடந்தது. துணைவேந்தர் பி.துரை சாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பதிவாளர் இராம.சீனுவாசன் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் மதியம் 2 மணியளவில் முடிவடைந்தது. சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்ட விஷயங்கள் குறித்து துணைவேந்தர் துரைசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அரசு தேர்வுத்துறையால் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழை மாணவர்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதேபோன்று சென்னை பல்கலைக்கழகமும் அதன் இணைப்பு அங்கீகாரத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் பட்டப் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைனில் தற்காலிக புரவிஷனல் சான்றிதழ் வழங்கும் முறையை ஜூலை 1-ம் தேதி முதல் அறிமுகப்படுத்த உள்ளது. மாணவர்கள் தங்களுக்குரிய தற்காலிக புரவிஷனல் சான்றிதழை தாங்களே பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த சான்றிதழ் 3 மாதம் செல்லத்தக்கது. அதற்குள் அவர்களுக்கு அசல் புரவிஷனல் சான்றிதழ் வழங்கப்பட்டுவிடும். இந்த புதிய திட்டத்துக்கு சிண்டிகேட் ஒப்புதல் அளித்துள்ளது. தொலைதூரக்கல்வி தேர்வு விடைத்தாள்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து மாயமான விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Comments