சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் ஜூன் இறுதிக்குள் வெளியாகும் ஆர்ப்பாட்டம் நடந்ததை தொடர்ந்து அறிவிப்பு

சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் ஜூன் இறுதிக்குள் வெளியாகும் ஆர்ப்பாட்டம் நடந்ததை தொடர்ந்து அறிவிப்பு | கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட சிறப்பாசிரியர் தேர்வு முடிவை உடனே வெளியிடக்கோரி தேர்வர்கள் டிபிஐ வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஜூன் மாத இறுதிக்குள் முடிவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், உடற்கல்வி, இசை ஆகிய சிறப்பாசிரியர் பதவியில் 1,325 காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வினை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) அக்டோபர் 10-ம் தேதி வெளியிடப்பட்டன. ஆனால் தேர்வு நடந்து முடிந்து 8 மாதங்கள் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிடக்கோரி தேர்வர்கள் கடந்த 5 மாதங்களாக போராடி வருகிறார்கள். இந்த நிலையில், சிறப்பாசிரியர் தேர்வு எழுதிய தேர்வர்கள் சுமார் 200 பேர் நேற்று ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் அமைந்துள்ள சென்னை டிபிஐ வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். அவர்களிடம் ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினர் ஆனந்த் பேச்சுவார்த்தை நடத்தினார். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று உத்தரவாதம் அளிக்கும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக தேர்வர்கள் அவரிடம் கூறினர். இதைத்தொடர்ந்து, தேர்வர்கள் சார்பில் 5 பேர் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஜெயந்தியை சந்தித்து தங்கள் கோரிக்கையை முறையிட்டனர். தேர்வு வாரியத்தின் தலைவர் ஜெயந்தி சார்பில் நிருபர்களிடம் பேசிய உறுப்பினர் - செயலர் உமா, சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும். சிறப்பாசிரியர் தேர்வு பணிகள் முடிந்ததும் அடுத்த தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2018-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையின்படி, வேளாண் ஆசிரியர், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர், அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் ஆகிய தேர்வுகளுக்கான அறிவிப்புகள் மே மாதத்துக்குள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்னும் அவை வெளியிடப்படவில்லை. அதேபோல், உதவி தொடக்கக்கல்வி அதிகாரி தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் முதல் வாரத்தில் வெளியிடப்பட வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான அறிவிக்கை ஜூலை முதல் வாரத்தில் வெளியாக வேண்டும் என்பது குறிப்பிடத் தக்கது.

Comments