பொறியியல் தரவரிசை பட்டியலை ஜூன் இறுதியில் வெளியிட ஏற்பாடு

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இறுதிகட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நேற்றுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து தரவரிசைப் பட்டியலை ஜூன் இறுதி வாரம் வெளியிட அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு கலந்தாய்வு மூலம் பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைன் கலந்தாய்வு முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் அதற்கு முன்பாக சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்தது.இதற்காக சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம் உட் பட தமிழகம் முழுவதும் 42 மையங்கள் அமைக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 8-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி முடிவடைந்தது.நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் தவிர்க்க முடியாத காரணத்தினால் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள இயலாத மாணவர்களுக்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பு 17-ம் தேதி வரை கூடுதலாக 3 நாட்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான நேற்று மட்டும் சுமார் 2,000 பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார். சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்துள்ள நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கையின் அடுத்தகட்ட நிகழ்வான தரவரிசைப் பட்டியலை ஜூன் இறுதி வாரத்தில் வெளியிட அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கான ஆன் லைன் கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்தில் தொடங்கும்.

Comments