ஜூலை 18-ம் தேதிக்குப் பின்னரே பொறியியல் ஆன்லைன் கலந்தாய்வு உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

ஜூலை 18-ம் தேதிக்குப் பிறகே பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் சார்பில் வேலைவாய்ப்புக்கான புதிய தொழில் நிறுவன கொள்கை உருவாக்கம் மற்றும் திறன்மேம்பாடு பற்றிய ஒருநாள் கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் அவர்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பதற்காக தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித் துறையுடன் இணைந்து 6 கல்லூரிகளில் ரூ.546 கோடி செலவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் அரசின் நிதி பங்கு 10 சதவீதம் (ரூ.54 கோடி) ஆகும். மத்திய அரசு தற்போது இருக்கிற பல்கலைக்கழக மானியக் குழுவை (யுஜிசி) நீக்கிவிட்டு இந்திய உயர்கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு சட்டத்தின் மீது கருத்து தெரிவிக்க ஜூலை 20-ம் தேதி வரை காலஅவகாசம் அளித்துள்ளது. யுஜிசி அமைப்பு நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. இந்த கருத்தை மத்திய அரசிடம் தெரிவிப்போம். கால அவகாசம் கோரி முறையீடு பொறியியல் ஆன்லைன் கலந்தாய்வை பொருத்தவரையில், எம்பிபிஎஸ் கலந்தாய்வு ஜூலை 10-ம் தேதி முடிவடைந்ததும் தொடங்க திட்டமிட்டிருந்தோம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி பொறியியல் மாணவர் சேர்க்கையை ஜூலை 31-ம் தேதி முடித்து ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி வகுப்புகளை தொடங்கிவிட வேண்டும். தற்போது எம்பிபிஎஸ் கலந்தாய்வு காரணமாக, மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் அவகாசம் அளிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம். இதுதொடர்பான விசாரணை வருகிற 13-ம் தேதி வருகிறது. இதற்கிடையே, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 16,17, 18-ம் தேதிகளில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜூலை 18-ம் தேதிக்குப் பின்னரே பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வை தொடங்க முடியும். இவ்வாறு அமைச்சர் அன்பழகன் கூறினார். 2 லட்சம் பேருக்கு பயிற்சி முன்னதாக நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர், "உயர்கல்வியில் மட்டுமின்றி தொழில்நுட்ப கல்வியிலும் இந்தியாவில் தமிழகமே முன்னணியில் உள்ளது. படித்து முடிக்கும் மாணவர்களை திறன்மிக்கவர்களாக மாற்ற பல்கலைக்கழகங்களும் பயிற்சி மையங்களும் இணைந்து செயல்பட வேண்டும். திறன்மேம்பாட்டு பயிற்சியானது பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பை அடிப்படையாக வைத்து அளிக்கப்பட வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம்-2023 படி, அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 4 லட்சத்து 79 ஆயிரம் பேருக்கு இப்பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. நடப்பு ஆண்டில் ரூ.200 கோடி செலவில் 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க உள்ளோம். தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களில் 20 ஒன்றியங்களில் இருசக்கர வாகனம் பழுதுபார்ப்பது, டிராக்டர் பழுதுபார்ப்பது ஆகிய துறைகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

Comments