நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண்கள் உயர் நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த கட்சிகள், டாக்டர் சங்கங்கள் கோரிக்கை

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பை அரசு செயல்படுத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் டாக்டர்கள் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தொடுத்த வழக்கில், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. காலம் தாழ்த்தாமல் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: நீட் தேர்வு குளறுபடி காரணமாக தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை வரவேற்கத்தக்க மிகச் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட நீதி இது. மேல்முறையீடு என்று கூறி, இந்த நியாயமான, மனிதாபிமான தீர்ப்பை புறந்தள்ளும் முயற்சியில் சிபிஎஸ்இ ஈடுபடக் கூடாது. பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி: தமிழில் நீட் தேர்வை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 196 கருணை மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்துள்ளது. தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு தவறான வினாக்களை எழுப்பியதால் இழைக்கப்பட்ட அநீதிக்கு இதுதான் சரியான பரிகாரம் ஆகும். சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்: நீதிமன்ற தீர்ப்பு வரவேற்க்கத்தக்கது. இத்தீர்ப்பை நடைமுறைப்படுத்த 196 மதிப்பெண்ணை வழங்கினால், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் நீட்டில் தேர்ச்சி பெற்று விடுவர். இதன்மூலம் பல மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும். இத்தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசும், சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்யக்கூடாது. மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் அரங்கம் பொதுச்செயலாளர் டாக்டர் எஸ்.காசி: நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது.சிபிஎஸ்இ-க்கு, இந்தத் தீர்ப்பு ஒரு நல்ல பாடம். கடைசி நேரத்தில் தேர்வு மையங்களை வெளி மாநிலங்களுக்கு மாற்றியது, தமிழ் வினாத்தாள் தயாரிப்பில் மெத்தனம் காட்டியதை இந்தத் தீர்ப்பு வெளிக்காட்டியுள்ளது. Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

Comments