சிபிஎஸ்இ பள்ளிகளில் மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு கோரி வழக்கு

மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகளுக்கு சிபிஎஸ்இ பள்ளிகளில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த எல்.கே.வெங்கட் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் உரிமை மற்றும் பாதுகாப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்தச் சட்டம் முறையாக அமல்படுத்தப்படுவதில்லை. குறிப்பாக மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகளுக்கு கல்வியில் இந்த இடஒதுக்கீடு தரப்படுவதில்லை. பெரும்பாலும் மாற்றுத் திறனாளிகள், மற்றொரு மாற்றுத் திறனாளிகளைத்தான் திருமணம் செய்து கொள்கின்றனர். இதனால் இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை வளர்ப்பதற்கு மற்றவர்களின் துணையை நாட வேண்டியுள்ளது. சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு சிபிஎஸ்இ பள்ளிகளில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு கடந்த ஜூன் மாதம் மனு அனுப்பியும் இதுவரையிலும் எந்த பதிலும் இல்லை. எனவே எனது மனுவை பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக மத்திய அரசு 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை தள்ளி வைத்தனர்.

Comments