56 அரசு பள்ளிகளுக்கு ‘புதுமைப்பள்ளி’ 140 ஆசிரியர்களுக்கு ‘கனவு ஆசிரியர்’ விருது

தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட 56 அரசு பள்ளிகளுக்கு ‘புதுமைப்பள்ளி’ 140 ஆசிரியர்களுக்கு ‘கனவு ஆசிரியர்’ விருது முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார். முதல்வர் கே.பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில், அனைத்து வகையிலும் சிறப்பாகச் செயல்பட்ட 56 அரசு பள்ளிகளுக்கு ‘புதுமைப் பள்ளி’ விருதுகளை வழங்கிடும் அடையாளமாக 5 பள்ளிகளுக்கு ‘புதுமைப் பள்ளி’ விருதுகளையும், பரிசுத் தொகைக்கான காசோலைகளையும் நேற்று வழங்கினார். தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட 56 அரசுப் பள்ளிகளுக்கு ‘புதுமைப்பள்ளி’ விருதுகள், சிறந்த முறையில் மாணவர்களுக்கு பயிற்றுவித்த 140 ஆசிரியர்களுக்கு ‘கனவு ஆசிரியர்’ விருதுகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் கே.பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 2017-18-ம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது, “மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளைக் கண்டறிந்து, ஒரு மாவட்டத்துக்கு ஒரு தொடக்கப் பள்ளி, ஒரு நடுநிலைப் பள்ளி, ஓர் உயர்நிலைப் பள்ளி, ஒரு மேல்நிலைப் பள்ளி என 4 பள்ளிகளுக்கு ‘புதுமைப்பள்ளி’ விருதும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.1 லட்சம், மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.2 லட்சம் பரிசாக வழங்கப்படும். அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் கணினியைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் சிறந்த ஆசிரியர், கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர், குழந்தைகள் சேர்க்கை மற்றும் பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர் என ஒரு மாவட்டத்துக்கு 6 ஆசிரியர் வீதம் தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் ‘கனவு ஆசிரியர் விருது’ம் தலா ரூ.10,000 ஊக்கத் தொகையும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன்படி புதுமையான விதத்தில் சிறப்பாகச் செயல்பட்ட 16 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், 16 நடுநிலைப் பள்ளிகள், 12 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 12 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 56 பள்ளிகளுக்கு புதுமைப்பள்ளி விருதுகள் மற்றும் பரிசுத் தொகையாக ரூ. 80 லட்சம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் அடையாளமாக, 5 பள்ளிகளுக்கு முதல்வர் கே.பழனிசாமி விருதுகளை வழங்கினார். ரூ.10,000 ஊக்கத்தொகை மேலும், சிறந்த முறையில் மாணவர்களை பயிற்றுவித்த அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில், 140 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு ‘கனவு ஆசிரியர்’ விருது வழங்கும் அடையாளமாக 5 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் மற்றும் தலா ரூ.10,000-க்கான ஊக்கத்தொகையையும் முதல் வர் வழங்கினார். மேலும்,முன்னாள் சட்டத்துறை அமைச்சர் மறைந்த கே.ஏ. கிருஷ்ணசாமி சேகரித்து வைத்திருந்த 1,500 புத்தகங்களை, தமிழ்நாடு நூலகத் துறைக்கு அன்பளிப்பாக வழங்குவதன் அடையாளமாக, கே.ஏ. கிருஷ்ணசாமியின் குடும்பத்தினர் 5 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பினை முதல்வரிடம் வழங்கினர். நிகழ்ச்சியில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பா. வளர்மதி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக் கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் வி.சி. ராமேஸ்வரமுருகன், தொடக்கக் கல்வி இயக்குநர் ஏ. கருப்பசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments