6, 9, 11-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு ஜூலை 9 முதல் சிறப்பு பயிற்சி மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் ஏற்பாடு

புதிய பாடத்திட்டம் குறித்து 6,9, 11-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு ஜூலை 9 முதல் 21-ம் தேதி வரை மாவட்ட அளவில் சிறப்பு பயிற்சி அளிக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தில் 12 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக நடப்பு கல்வி ஆண்டில் (2018-19) 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கும் எஞ்சிய வகுப்புகளுக்கு படிப்படியாக அடுத்தடுத்த கல்வி ஆண்டிலிருந்தும் புதிய பாடத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் படுகின்றன. புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், 6,9, 11-ம் வகுப்புக்கு பாடம் எடுக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, புதிய பாடத்திட்டம் குறித்தும் மாணவர்களுக்கு எளிமையான முறையில் புதிய பாடங்களை சொல்லிக்கொடுப்பது குறித்தும் ஆசிரியர்களுக்கு ஜூலை 9 முதல் 21-ம் தேதி வரை மாவட்ட அளவில் பாடவாரியாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள் பயிற்சி அளிக்கிறார்கள். மாவட்ட அளவிலான இப்பயிற்சியில் கலந்துகொள்ளாத ஆசிரியர்களுக்கு ஜூலை 23, 24-ல் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வட்டார அளவில் இதர ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள்.

Comments