எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதல்கட்ட கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவர்கள் 7 பேருக்கு இடம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு வரும் 16-ம் தேதி தொடக்கம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான முதல்கட்ட கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 7 பேருக்கு இடம் கிடைத்துள்ளது. தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. சென்னை அண்ணாசாலை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2018- 19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு நேற்று முன்தினம் இரவு 10 மணியுடன் முடிவடைந்தது. இதில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் மாநில அரசுக்கான 2,639 எம்பிபிஎஸ் இடங்கள் நிரம்பின. இதேபோல் 11 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கான 862 இடங்கள் நிரப்பப்பட்டன. சென்னையில் உள்ள தமிழ் நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியின் 153 பிடிஎஸ் இடங்கள் நிரம்பின. தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டுக் கான 915 பிடிஎஸ் இடங்களில் 246 இடங்கள் நிரப்பப்பட்டன. மீதம் 669 பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வில் 3,882 பேருக்கு கல்லூரிகளில் சேர்வதற்கான அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் 2,805 பேர், சிபிஎஸ்இ உள்ளிட்ட பாடத்திட்டங்களில் படித்தவர்கள் 1,077 பேர் ஆவர். அரசு பள்ளியில் படித்த 7 பேரும், அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த 13 பேரும் கல்லூரிகளில் சேர்வதற் கான அனுமதிக் கடிதத்தைப் பெற்றுள்ளனர். 16 முதல் 18-ம் தேதி வரை வேலூர் சிஎம்சி உள்ளிட்ட 12 தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான 723 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 16 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான 645 பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. அதன்பின், முதல்கட்ட கலந் தாய்வில் காலியாக உள்ள இடங்கள் மற்றும் அனுமதி கடிதம் பெற்ற மாணவர்கள் சேராததால் ஏற்படும் காலியிடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந் தாய்வு நடைபெற உள்ளது.

Comments