பள்ளிக்காக ரூ.7 லட்சம் செலவு செய்த தலைமை ஆசிரியர்

தனியார் பள்ளிக்கூடங்களுக்கு சவால் விடும் வகையில் அரசு நடுநிலைப்பள்ளியை தனி ஒருவராக நின்று போராடி வளர்ச்சியடைய வைத்துள்ளார் தலைமை ஆசிரியர் இளங்கோவன். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் யூனியனில் கரிவலம்வந்தநல்லூரை கடந்து விருதுநகர் மாவட்ட எல்லையையொட்டி அமைந்துள்ளது பெருமாள்பட்டி கிராமம். இங்கு 1941-ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பிறகு 2004-ம் ஆண்டு இந்த பள்ளிக்கூடம் நடுநிலைப்பள்ளிக்கூடமாக உயர்த்தப்பட்டது. இங்கு தலைமை ஆசிரியராக இளங்கோவன் பொறுப்பேற்றப்பின் இந்த பள்ளிக்கூடம் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்து வருகிறது. 2016-17-ம் கல்வி ஆண்டில் இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் இளங்கோவன் நல்லாசிரியராக தேர்வு செய்யப்பட்டு, தமிழக அரசின் விருது பெற்று உள்ளார். தலைமை ஆசிரியர் இளங்கோவன் இந்த பள்ளியை தனது சொந்த பள்ளிக்கூடமாக கருதி, தனது சொந்த நிதியில் ரூ.7 லட்சம் வரை செலவு செய்து பள்ளிக்கூடத்தை அழகுற மாற்றி உள்ளார். அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளின் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இவர் பள்ளிக்கூட வளர்ச்சிக்கும், மாணவ-மாணவிகளின் கல்வி மேம்பாட்டுக்கும் சில கட்டுப்பாடுகளையும், நடைமுறை மாற்றங்களையும் செய்து பெற்றோர் வியக்கும் வகையில் செயல்பட்டு உள்ளார். அதாவது மாணவ-மாணவிகள் சரியாக காலை 8.30 மணிக்குள் பள்ளிக்கூடத்துக்குள் வந்து விட வேண்டும். அதே போல் ஆசிரியர்களும் 8.30 மணிக்குள் உள்ளே வந்து விட வேண்டும். அவர்கள் தலைமை ஆசிரியர் அறைக்கு சென்று அங்குள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு, செல்போனை சைலைன்ட் மோடில் தலைமை ஆசிரியர் மேஜையில் உள்ள டப்பாவில் போட்டு விட்டு வகுப்பறைகளுக்கு சென்று விடுகின்றனர். குழந்தைகள் தின்பண்டங்கள், நொறுக்கு தீனிகளை பள்ளிக்கூடத்துக்குள் கொண்டு வரக்கூடாது. ஆனால் மாலை 4.10 மணிக்கு பள்ளிக்கூடம் முடிந்து செல்லும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ஒரு பிஸ்கெட்டை ஆசிரிய, ஆசிரியைகள் வழங்குகின்றனர். சத்துணவு கூடத்தில் தண்ணீரை சுட வைத்து வகுப்பறை தோறும் வழங்குகின்றனர். இதுதவிர மாதம் ஒரு முறை டாக்டரை அழைத்து வந்து மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்படுகிறது. இது தவிர ஒரு வகுப்பறையை “ஸ்மார்ட் வகுப்பறையாக” மாற்றம் செய்து உள்ளார். புரஜெக்டர் கருவி மற்றும் தொடுதிரையும் அந்த வகுப்பறையில் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும் இந்த பள்ளிக்கூட வளாகத்தில் 15 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி உள்ளார். ஆசிரியர்கள் பள்ளிக்கூட மேம்பாட்டுக்கு சொந்தமாக நிதி செலவு செய்வதை கண்ட ஊர் மக்கள் ஆர்வத்துடன் தாங்களும் பணம் சேகரித்து சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பறை கட்டுவதற்கு உதவி செய்து உள்ளனர். கழிப்பறையில் நாப்கின் எரியூட்டியும் பொருத்தப்பட்டு உள்ளது. இளம்பருவ மாணவிகள் நாப்கினை எரிப்பதற்கு ஆசிரியைகள் வழிகாட்டவும் செய்து உள்ளார். பள்ளிக்கூடத்துக்கு வெளிப்புற சுவரில் கல்வி வளர்ச்சிக்கு தேவையான ஓவியங்கள், பேனர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நல்லாசிரியர் இளங்கோவனின் கண்டிப்பும், கடின உழைப்பும் எங்கள் பகுதி மாணவ-மாணவிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என பொதுமக்கள் கூறுகிறார்கள்.

Comments