சட்ட கல்லூரியில் ஜூலை 9-ல் வகுப்புகள் தொடக்கம் சட்டக் கல்வி இயக்குநர் அறிவிப்பு

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு இடம் மாறிய சட்ட கல்லூரியில் ஜூலை 9-ல் வகுப்புகள் தொடக்கம் சட்டக் கல்வி இயக்குநர் அறிவிப்பு திருவள்ளூர் அருகே பட்டரைபெரும்புதூரில், ரூ.60.37 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியை முதல்வர் கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து சட்டக் கல்லூரியின் வகுப்பறைகளைப் பார்வையிட்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, சார் ஆட்சியர் ரத்னா உள்ளிட்டோர். திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் ஜூலை 9-ம் தேதி வகுப்புகள் தொடங்கும் என சட்டக் கல்வி இயக்குநர் என்.எஸ்.சந்தோஷ் குமார் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: நீதிபதி பி.சண்முகம் விசாரணை ஆணையத்தின் பரிந்துரை மற்றும் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி தற்போதைய இடத்தில் இருந்து (பாரிமுனை) காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் தாலுகா புதுப்பாக்கத்துக்கும், திருவள்ளூர் மாவட்டம் பட்டறைபெரும்புதூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டது. அங்கு ரூ.117 கோடியே 78 லட்சம் செலவில் மாணவ-மாணவிகள் விடுதிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி திங்கள்கிழமை திறந்துவைத்தார். கல்லூரி இடமாற்றம் தொடர்பான வெளியிடப்பட்ட அரசாணையின்படி, புதுப்பாக்கம் வளாகத்தில் 5 ஆண்டு சட்டப் படிப்பும், பட்டறைபெரும்புதூர் வளாகத்தில் 3 ஆண்டு மற்றும் எல்எல்எம் படிப்புகளும் 2018-19-ம் கல்வி ஆண்டு முதல் நடத்தப்பட வேண்டும். எனவே, சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் 5 ஆண்டு சட்டப் படிப்பில் தற்போது படிக்கும் மாணவர்களுக்கு புதுப்பாக்கம் வளாகத்திலும், 3 ஆண்டு மற்றும் எல்எல்எம் சட்ட மேற்படிப்பில் தற்போது படிக்கும் மாணவர்களுக்கு பட்டறைப்பெரும்புதூர் வளாகத்திலும் ஜூலை 9-ம் தேதி காலை முதல் வகுப்புகள் தொடங்கி நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments