அண்ணனான ஆசிரியர் பள்ளிக்கு மகன்களோடு வரும் ஆசிரியர் விஜயராஜ்.

தேனி அருகே அய்யனார்புரம் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் விஜயராஜை மாணவ-மாணவிகள் யாரும் ‘சார்’ என்றோ, ‘ஐயா’ என்றோ அழைப்பது இல்லை. வாய் நிறைய ‘அண்ணா... அண்ணா...’ என்றே அழைக்கின்றனர். புத்தகத்துக்கு வெளியிலும் கல்வி இருக்கிறது என்பதை உணர்த்தி, கல்வியோடு இணைந்து பல கலைகளையும் கற்றுக் கொடுத்து வருகிறார். வகுப்பறைக்குள் மாணவ-மாணவிகள் குழுவாக சேர்ந்து பாடம் படித்தல், கலந்துரையாடலுக்காக சிறிய மேஜைகள் வைக்கப்பட்டுள்ளன. அமர்வதற்காக சிறு, சிறு பஞ்சு மெத்தை இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த பஞ்சு மெத்தை இருக்கையில் அமர்ந்துகொண்டு மாணவ, மாணவிகள் பாடம் படிக்கின்றனர். எளிமையாகவும், பாடங்களை புரிந்தும் படிக்கும் வகையிலும் கற்றல் அட்டைகள், கல்வி உபகரணங்கள் போன்றவை புதிது, புதிதாய் உருவாக்கப்பட்டு வகுப்பறை முழுவதும் நிரம்பிக் கிடக்கின்றன. பள்ளியில் மாணவ நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டு, சுகாதாரத்துறை, கல்வித்துறை, பண்பாட்டுத்துறை, விளையாட்டுத்துறை என 4 துறை அமைச்சர்களாக மாணவ, மாணவிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். புத்தகங்களை கடந்து கதை சொல்லுதல், பொம்மலாட்டம், நாடகம் நடித்தல், பள்ளிச்சுவரில் ஓவியம் வரைதல் என தனித்திறமைகளிலும் மாணவ, மாணவிகள் சிறந்து விளங்குகின்றனர். ஆசிரியர் விஜயராஜ் கூறியதாவது:- எனது மனைவி கோவிந்தம்மாள் மின்வாரிய ஊழியராக வேலை பார்க்கிறார். பூர்வபூஜிதன், நிகரமைவன் என இரு மகன்கள். பூர்வபூஜிதன் 3-ம் வகுப்பும், நிகரமைவன் 1-ம் வகுப்பும் படிக்கின்றனர். நான் வேலை பார்க்கும் பள்ளியிலேயே மகன்களை சேர்க்க வேண்டும் என்று சொன்ன போது முதலில் எனது மனைவி சம்மதிக்கவில்லை. இருவரும் சம்பாதிப்பதால் தனியார் பள்ளியில் படிக்க வைக்கலாம் என்றார். பின்னர், என் மீதுள்ள நம்பிக்கையில் சம்மதித்தார். ஆசிரியரை மையப்படுத்திய கற்றலை விட மாணவர்களை மையப்படுத்திய கற்றல் தான் சரியாய் வரும் என்பதால், மாணவர்களின் மனநிலையை புரிந்துகொண்டு வகுப்பறையில் உற்சாகம் குறைந்து விடாமல் பார்த்துக் கொள்கிறேன். உழைப்பு என்றைக்கும் வீண் போகாது. தனியார் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பிய பெற்றோர் இந்த ஆண்டு எங்கள் பள்ளியில் சேர்த்துள்ளனர். தற்போது 23 பேர் படிக்கின்றனர். இந்த ஆண்டு 11 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் பிற பள்ளிகளில் இருந்து விலகி, இங்கு வந்து சேர்ந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments