தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆகஸ்ட் முதல் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு அமல் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

அரசுப் பள்ளிகளில் ஆகஸ்ட் மாதம் முதல் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறை நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோட்டில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது: அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு கழிப்பிட வசதி செய்து தர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியருக்கு தேவையான கழிப்பிட வசதிகள் விரைவில் செய்து தரப்படும். அரசின் உத்தரவை மீறி தனியார் பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படுமானால், பள்ளி செயல்படுவதற்கான தடையின்மைச் சான்று ரத்து செய்யப்படும். சட்டப்பேரவையில் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளை கட்டுப்படுத்தும் வகையிலான புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம், அதிக கல்விக் கட்டண வசூலைத் தடுக்கவும், பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு மேம்பாடு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மலைக்கிராமங்கள் மற்றும் இணையதள வசதி இல்லாத தொலைதூர கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு பயோமெட்ரிக் மற்றும் இணையதள வசதி ஏற்படுத்த ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 1942 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அதுவரையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக ரூ.7500 ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக்கொள்ளலாம் என்றார்.

Comments