அம்மா என்று அழைக்கப்படும் தலைமை ஆசிரியை.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே இருக்கிறது கோ.ஆதனூர் கிராமம். மிகவும் பின்தங்கிய இந்த கிராமத்தில், ஒரு பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கூடத்தை வண்ணமயமாக்கி, பல ஓவியங்களை தனது சொந்த செலவிலேயே செய்து இருக்கிறார் இப்பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி. இவர் இதற்கு முன்பு பணிபுரிந்த வீரட்டிக்குப்பம் அரசுப் பள்ளியை தனியார் பள்ளிக்கு இணையாக ஏற்கனவே மாற்றி காட்டியிருந்தார். பெயருக்கு ஏற்றார்போல தமிழ்வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ள எழுத்தாளர். அதனால்தான் என்னவோ தமிழக அரசின் தமிழ்வளர்ச்சிக்கான விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் விருது, கலைஞர் பொற்கிழி விருது, மும்பையில் உள்ள ஸ்பேரோ நிறுவனத்தின் விருது என்று எண்ணற்ற விருதுகளை வாங்கி குவித்துள்ளார். தனியார் பள்ளிக்கூடத்திற்கு சென்ற மாணவர்கள் கூட தற்போது கோ.ஆதனூர் பள்ளியில் தான் படிப்பேன் என்று அடம் பிடித்து, இந்த பள்ளியில் சேர்ந்த குழந்தைகள் பலர். பணியை ராஜினாமா செய்த பிறகும் மாணவர்கள், பெற்றோர்களின் நெகிழ்ச்சிப் போராட்டத்தால், தன் பணியை மீண்டும் தொடர்கிறார் தமிழ்செல்வி. பள்ளியில் பயிலும் மாணவர்கள் தமிழ்ச்செல்வியை அம்மா என்றே செல்லமாக அழைக்கிறார்கள். இதற்கு மாணவர்கள் மீது இவர் காட்டும் பரிவும், அக்கறையும் தான் காரணம் என்றால் அது மிகையாகாது. பள்ளியை சொந்த செலவில் மேம்படுத்துதல், மாணவர்கள் மீது அன்பு காட்டுதல் என்று அனைத்திலும் அக்கறை காட்டும் தமிழ்ச்செல்வி தனது ஆசிரியர் பணி பற்றி கூறியதாவது:- 2015-ம் ஆண்டு முதல் கோ.ஆதனூர் பள்ளிக் கூடத்தில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். இந்த பள்ளிக்கூடத்திற்கு நான் வந்த போது ஒரு பள்ளிக்கூடம் எப்படியெல்லாம் இருக்கக்கூடாதோ? அதனை போன்று இருந்தது. மழைபெய்தால் குட்டையின் நடுவில் உள்ள ஒரு பள்ளியை போன்று, பள்ளிக்கூடத்தை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்து நிற்கும். மழைநின்றாலும் பள்ளியை திறப்பதற்கு 3, 4 நாட்கள் ஆகும். என் சொந்த செலவிலும், நண்பர்களின் உதவியுடனும், ஊர் முக்கிய பிரமுகர்களின் அன்பளிப்பாலும் தாழ்வான பகுதிகளை மேடாக்கினேன். பள்ளிக்கூடத்திற்கு வரும் சாலை சேறும், சகதியுமாக இருக்கும். அந்த சாலையை மேம்படுத்த பல போராட்டங்களை சந்திக்க வேண்டியதாக இருந்தது. இன்று வகுப்பறை சுவர்கள் வண்ணமயமாக மாற்றப்பட்டுள்ளது. பீரோ, கணினி, அச்சு எந்திரங்கள், மேஜை, நாற்காலிகள் என தனியார் பள்ளிக்கூடத்திற்கு இணையான அனைத்து வசதிகளையும் செய்துள்ளோம். மாணவர்கள் என்னை அம்மா என்று அழைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. அந்த அளவிற்கு மாணவர்களை நான் நேசிக்கின்றேன். மாணவர்கள் என்னை நேசிக்கின்றனர். மாணவர்களை வழக்கமான செயல்பாடுகளில் இருந்து மாற்றி புதிய அணுகுமுறையில் அணுகும்போது மாணவர்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வார்கள். நான் ஒரு பிரச்சினையால் பாதிக்கப்பட்ட போது, விசாரணைக்கு வந்த அதிகாரிகளிடம் என் ராஜினாமா கடிதத்தை கொடுத்தேன். நான் பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை என தெரிந்ததும் மாணவர்களும், பெற்றோர்களும் என்னை மீண்டும் பணியில் சேரச்சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டனர். நான் வந்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றனர். அப்போது மாணவர்களை நான் சந்தித்தப்போது என்னை, ‘அம்மா’ என்று ஓடி வந்து கட்டி அழுதனர். அந்த தருணத்தில் உணர்ச்சிகளை மீறி நானும் குழந்தைகளுடன் அழுதுவிட்டேன். அவர்களுக்காகவே மீண்டும் பணியில் சேர்ந்தேன். பள்ளியில் படிப்புக்கு முக்கியத்துவம் தருவதை போல கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளுடன் முக்கிய செய்திகள், நாட்டு நடப்பு, அரசியல் நிகழ்வுகளையும் மாணவர்களுக்கு அறியப்படுத்துகிறோம். தினந்தோறும் நடைபெறும் வழிபாட்டு கூடங்களில் தமிழர் தொன்மம், வீரம், மன்னர்களின் வரலாறு ஆகிய கதைகளை சொல்லும் போது மாணவர்களை எளிதில் கவரமுடியும். ஒரு மாணவருக்கு பிறந்தநாள் என்றால் எங்கள் பள்ளியில் வரைந்துள்ள பிறந்தநாள் கேக் படத்தில் அந்த மாணவரின் பெயரையும், பெற்றோர் பெயரையும் எழுதி அந்த மாணவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு ஆசிரியர்களும், சக மாணவர்களும் வாழ்த்து கூறுவார்கள். இவையெல்லாம் மாணவர்களுக்கு வீட்டில் கிடைக்காது. ஆனால் எங்கள் பள்ளியில் கிடைக்கும். அதனால் மாணவர்கள் விடுமுறை எடுக்காமலும், இடைநிற்றல் இல்லாமலும் தொடர்ந்து பள்ளிக்கூடத்திற்கு வருகின்றனர். இந்த வருடம் மட்டும் எங்கள் பள்ளியின் செயல்பாடுகளை பார்த்து, 12 தனியார் பள்ளி மாணவர்கள் எங்கள் பள்ளியில் சேர்ந்துள்ளனர். அரசுப்பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறேன். கடந்த 2016-ம் ஆண்டு பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். இந்நிகழ்வில் திரைப்பட நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி பங்கேற்றார். மேற்கண்டவாறு ஆசிரியை தமிழ்ச்செல்வி கூறினார்.

Comments