பிப்ரவரி, மே மாதம் நடக்கும் நீட் தேர்வு உத்தேச காலஅட்டவணை வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு பிப்ரவரி, மே மாதம் நடக்கும் நீட் தேர்வுக்கான உத்தேச காலஅட்டவணை வெளியாகியுள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தி வந்த எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட் - NEET), அடுத்த கல்வி ஆண்டு முதல் ஆன்லைனில் ஆண்டுக்கு இரண்டு முறை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) என்ற புதிய அமைப்பு நடத்தும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கடந்த 7-ம் தேதி அறிவித்தார். இதையடுத்து நீட் தேர்வு தொடர்பான உத்தேச காலஅட்டவணை வெளியாகியுள்ளது. 2019-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு பிப்ரவரி மற்றும் மே மாதத்தில் நடைபெறுகிறது. பிப்ரவரி மாதத்துக்கான நீட் தேர்வுக்கு வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி 3-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை ஆன்லைனில் 8 கட்டங்களாக நீட் தேர்வு நடைபெறுகிறது. மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான நாளை தேர்வு செய்து கொள்ளலாம். மார்ச் மாதம் முதல் வாரத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. மே மாதத்துக்கான நீட் தேர்வுக்கு வரும் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-வது வாரத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மே 12-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ஆன்லைனில் 8 கட்டங்களாக நீட் தேர்வு நடைபெறுகிறது. மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான நாளை தேர்வு செய்து கொள்ளலாம்.

Comments