பணிப் பதிவேடுகளை கைபேசியில் பார்க்கும் வசதி கருவூல கணக்கு துறை ஆணையர் தகவல்

அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடுகளை கைபேசியில் பார்வையிடும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக கருவூல கணக்குத் துறை ஆணையர் சு.ஜவகர் தெரிவித்துள்ளார். கருவூல கணக்குத் துறை சார்பில் ‘ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண் மைத் திட்டம்’ குறித்த விழிப்புணர்வு கூட்டம் காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கருவூல கணக்குத் துறை ஆணையர் சு.ஜவகர் பங்கேற்று பேசியதாவது: நிதி மேலாண்மை தொடர் பான அரசுப் பணிகள் திறம்பட நடைபெற, மாநில அரசு நிதி மேலாண்மை மற்றும் மனித வள மேலாண்மையை இணைத்து ‘ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம்’ நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், மாநிலம் முழுவதும் சுமார் 29 ஆயிரம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள், நேரடி இணையத்தின் மூலம் சம்பளப் பட்டியல் மற்றும் இதர பட்டியல்களை கருவூலத்தில் சமர்ப்பிக்க இயலும். பணியில் சேர்ந்த நாள்முதல் இந்த திட்டத்தில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினிமயமாக்கப்பட்டு சம்பளப் பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விவரங்கள் உடனுக்குடன் பதியப்படும். அரசுப் பணியில் சேர்ந்தது முதல் ஓய்வுபெறும் வரை உள்ள அரசுப் பணியாளர்களின் பணி வரலாறானது முழுமையாக இத்திட்டத்தின் மூலம் கணினிமயமாக்கப்படுகிறது. மேலும், பணியாளர்கள், அவர்களது பணிப் பதிவேடுகளை கைபேசி மற்றும் கணினி மூலம் பார்வையிட வசதி ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் காவல்துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண் டனர்.

Comments