பணியிட மாறுதல் பெறாத தலைமை ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அம்மையநாயக்கனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோ.ஆர்தர் (வயது 49). திண்டுக்கல் கோபால்நகரில் வசிக்கும் இவர். தினமும் 27 கி.மீ. தூரம் பயணம் செய்து பள்ளிக்கு செல்கிறார். கடந்த 9 ஆண்டுகளாக ஒரே பள்ளியில் பணியாற்றி வருகிறார். அவர் விவரித்து கூறியதாவது:- நான் கடந்த 1995-ம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக பணியை தொடங்கினேன். கடந்த 2005-ம் ஆண்டு நிலக்கோட்டை அவையம்பட்டி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனேன். இதையடுத்து 2010-ம் ஆண்டு அம்மையநாயக்கனூர் பள்ளிக்கு வந்தேன். எங்கள் பள்ளியில் தமிழ், ஆங்கில வழிக்கல்வியை செயல்படுத்துகிறோம். தனியார் பள்ளிகளை விட எங்கள் மாணவர்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக கற்பித்தலில் சிறப்பு கவனம் செலுத்துவோம். ஒவ்வொரு மாணவருக்கும் தனிக்கவனம் செலுத்துவோம். வாசித்தல், எழுதுதலில் கூடுதல் கவனமாக இருப்போம். மேலும் ஆங்கிலத்தில் கடினமாக சொற்களை தமிழ் விளக்கத்துடன் அச்சடித்து கொடுத்துள்ளோம். தனியார் பள்ளிகளை போன்று எங்கள் பள்ளி மாணவர்களும் டை, பெல்ட் அணிந்து மிடுக்காக வருவார்கள். அதுவும் பெற்றோரை கவர்ந்து விடுகிறது. மேலும் மாணவர்களின் ஆர்வத்துக்கு ஏற்ப பாட்டு, நடனம், விளையாட்டு, ஓவியம், பேச்சு என பயிற்சி அளிக்கிறோம். இதனால் பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் பரிசுகளை குவித்துள்ளனர். மாணவர்கள் அன்றாட விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக ரெயில் நிலையம், தபால் நிலையம், வங்கிகளுக்கு அழைத்து சென்று அங்கு என்னென்ன பணிகள் நடக்கின்றன என்று விளக்குவோம். மேலும் ரெயில் டிக்கெட் எடுத்தல், சேமிப்பு கணக்கு, மணியார்டர் உள்ளிட்ட சேவைகள் பற்றி கற்றுக்கொடுக்கிறோம். ஊராட்சி அலுவலகத்துக்கு சென்று ஊராட்சி தலைவரின் பணிகள், பொதுமக்களின் உரிமைகள் குறித்து சொல்லி கொடுக்கிறோம். நான் தலைமை ஆசிரியராக பதவி ஏற்றபோது, இந்த பள்ளியின் நிலைமை மிகவும் சாதாரணமாக இருந்தது. பள்ளியின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதோடு, மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்கத்தில் தனிக்கவனம் செலுத்துகிறோம். இதற்கு எனது சக ஆசிரியைகள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். நான் சாதாரண கிராமத்தை சேர்ந்தவன். எனவே, கிராமமக்கள் அனைவரிடமும் பழகி நன்கு அறிமுகமாகி விட்டேன். இதனால் மாணவர்கள் நலனில் தானாகவே அக்கறை அதிகமாகி விட்டது. மேலும் ‘வாட்ஸ்அப்’ குழு அமைத்து அதில் ஆசிரியைகள், மாணவர்களின் பெற்றோர் அனைவரையும் இணைத்துள்ளேன். இதன் மூலம் மாணவர்களின் பிறந்தநாள், கல்வி மற்றும் விளையாட்டு உள்பட எந்த பிரிவில் சாதனை படைத்தாலும் வாழ்த்துகளை பதிவு செய்வோம். இதனை பெற்றோர் அனைவரும் பார்த்து விடுவார்கள். இது அவர்களுக்கு ஒரு உந்துதலாக இருப்பதோடு, வெளிப்படை தன்மையை உணர்கிறார்கள். எனவே, பெற்றோர்கள் உரிமையுடன் எங்களிடம் பழகுகிறார்கள். நல்ல மதிப்பும், மரியாதையையும் அளிக்கிறார்கள். அதோடு நான் உள்பட எந்த ஆசிரியைகளும் வேறு ஊருக்கு பணி மாறுதலில் செல்லக்கூடாது என்று அன்பு கட்டளையிட்டு இருக்கிறார்கள். எனவே, நானும் ஆசிரியைகளும் பணியிட மாறுதலில் செல்லாமல் இங்கேயே பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். மேற்கண்டவாறு தலைமை ஆசிரியர் ஆர்தர் கூறினார்.

Comments