மாவட்ட அளவிலான கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் அளித்து உத்தரவு

மாவட்ட அளவிலான கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் அளித்து உத்தரவு தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக் கல்வி சார்நிலைப்பணி விதிமுறைகளில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்மூலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: இதுவரை உதவி தொடக்கக் கல்வி அதிகாரி என்று அழைக் கப்பட்டு வந்த பணி இனிமேல் வட்டார கல்வி அலுவலர் என அழைக்கப்படும். இப்பதவிக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நியமன அலுவலராக இருப்பார். வட்டார கல்வி அதிகாரிகளை அந்த வருவாய் மாவட்டத்துக்குள் இடமாற்றம் செய்யும் அதிகாரம் முதன்மை கல்வி அதிகாரிக்கும், வருவாய் மாவட்டத்துக்கு வெளியே இடமாற்றம் செய்யும் அதிகாரம் பள்ளிக்கல்வி இணை இயக்குநருக்கும், கல்வி மாவட்டத்துக்குள் இடமாற்றம் செய்யும் அதிகாரம் மாவட்ட கல்வி அதிகாரிக்கும் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அவர் வெளியிட்ட மற்றொரு அரசாணையில் “தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணிக்கு தேர்வுசெய்யப்படுவோரின் பணி நியமன அலுவலராக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செயல் படுவார். கல்வி மாவட்டத்துக்குள் இடமாற்றம் செய்யும் அதிகாரம் மாவட்ட கல்வி அதிகாரிக்கும். வருவாய் மாவட்டதுக்குள் இட மாற்றம் செய்யும் அதிகாரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கும், வருவாய் மாவட்டத்துக்கு வெளியே இடமாற்றம் செய்யும் அதிகாரம் பள்ளிக்கல்வி இணை இயக்குநருக்கும் அளிக்கப்படுகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.

Comments