மண்டியிட்டு வணங்கி படிக்கச் சொல்லும் தலைமை ஆசிரியர்

விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் கீழ்பெரும்பாக்கத்தைச்சேர்ந்த 56 வயதான த.பாலு. இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பாலு பொறுப்பேற்ற பிறகு மாணவர்களை நல்வழிப்படுத்துவதோடு அவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அதாவது பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் யாரும் வெளியே செல்லக்கூடாது, மாலையில் பள்ளி முடிந்த பிறகும் ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். மேலும் சரியாக படிக்காத மாணவர்களையும், தலைமுடியை அதிகமாக வளர்த்தல் உள்ளிட்ட பல ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களையும் ஒழுங்குபடுத்தி, அவர்களுக்கு நற்பண்புகளை போதிக்கும் வகையில் அந்த மாணவர்கள் முன்பு தலைமை ஆசிரியர் பாலு, மண்டியிட்டு தனது இரு கைகளையும் கூப்பி வணங்கியவாறு சிறந்த முறையில் படிக்கச்சொல்வதோடு வருங்காலத்தில் நல்ல முறையில் தேர்ச்சி பெற்று நன்னெறிகளை பின்பற்றி வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும் என்று அறிவுரை வழங்கி வருகிறார். அதோடு ஒழுங்காக பள்ளிக்கு வராத மாணவர்கள் யார், யார் என கண்டறிந்து மாலையில் பள்ளி முடிந்ததும் அந்த மாணவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று அவர்களுடைய பெற்றோருடன் அமர்ந்து பேசி எதற்காக உங்களது மகன் பள்ளிக்கு வரவில்லை, மனரீதியாக ஏதேனும் பாதிக்கப்பட்டிருக்கிறானா? என கேட்டறிந்து பள்ளிக்கு அனுப்பி வைக்கும்படி அறிவுரை கூறி வருகிறார். தலைமை ஆசிரியரின் இந்த செயல்கள் அனைத்து மாணவர்களிடத்திலும் மற்றும் சக ஆசிரியர்கள் மத்தியிலும் மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. தனது ஆசிரியர் பணி பற்றி தலைமை ஆசிரியர் பாலுவிடம் பேசுகையில், அவர் நம்மிடம் கூறியதாவது:- அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மிகவும் ஏழைகள். முதல் தலைமுறை மாணவர்கள். ஏழைகளின் கடைசி புகழிடமே அரசு பள்ளிகள்தான். மாணவர்களுக்கு பேரூக்கம், பேருழைப்பு, மிகுந்த ஆர்வம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி இந்த ஐந்தும் இருக்க வேண்டும். இவை இருந்தாலே வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரலாம். தமிழ்வழிக்கல்வி, வாழ்க்கையில் உயர்வதற்கு ஒரு தடையில்லை என்று நம்பிக்கையோடு படிக்க வேண்டும். மாணவர்கள் சமூக வலைதளங்களில் மூழ்விடக்கூடாது. ஆசிரியர்களை பொறுத்தவரை, மாணவர்களின் நிலைக்கு இறங்கி வந்து அளவற்ற பொறுமையுடன் பாடங்களை சிறு, சிறு கருத்துக்களாக பிரித்து கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களிடத்தில் நட்புடன் பழக வேண்டும். வளர்ந்த பிள்ளைகளை திட்டக்கூடாது, அடிக்கக்கூடாது, அன்பு வழியில் மட்டுமே திருத்த முடியும் என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் உணர்ந்துகொள்ள வேண்டும். அவ்வாறு நடந்து கொண்டாலே ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே நல்லதொரு இணக்கம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments