கல்வி உதவித்தொகை பெறுவதற்கு பூர்த்தி செய்த விண்ணப்பத்தை எப்போது சமர்ப்பிக்க வேண்டும்? சென்னை கலெக்டர் தகவல்

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபை சேர்ந்த மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோருடைய ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும். கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்ப படிவங்களை, மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று வருகிற அக்டோபர் மாதம் 15-ந் தேதிக்குள் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் வங்கி கணக்கு எண் தொடர்பான விவரங்களை தவறாமல் குறிப்பிட வேண்டும். செப்டம்பர் மாதம் 1-ந் தேதி தொடங்கும் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை அக்டோபர் 15-ந் தேதிக்கு முன்பும், புது விண்ணப்பங்களை நவம்பர் 30-ந் தேதிக்கு முன்பும் அந்தந்த கல்வி நிறுவனங்களின் இணையதளம் மூலமும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கேட்டு தெரிந்துகொள்ளலாம். மேற்கண்ட தகவல் சென்னை மாவட்ட கலெக்டர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Comments