பணிமாறுதலின்போது மாணவர்களின் ஆதரவு பெற்ற ஆசிரியர் பகவான், கமல்ஹாசனை சந்திக்க மறுப்பு

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிபவர் கோவிந்த் பகவான். இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு பணிமாறுதலுக்கான அறிவிப்பு வந்தது. இதை அறிந்த அந்த பள்ளி மாணவர்கள் அவரை பணிமாறுதல் செல்வதற்கு அனுமதிக்க முடியாது என்று கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இது தமிழகம் முழுவதும் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆசிரியர், மாணவர்களுக்கு இடையேயான நல்லுறவுக்கு கோவிந்த் பகவான் சிறந்த உதாரணம் என்று பலரும் பாராட்டினார்கள். இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ஆசிரியரை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவிக்க இருப்பதாகவும், இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு கட்சி தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து நேற்று பிற்பகலில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்துக்கு பத்திரிகையாளர்கள் சென்றனர். ஆனால் கடைசி நேரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் வரவில்லை என்றும், பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஆசிரியர் கோவிந்த் பகவானை செல்போனில் தொடர்புகொண்டு கேட்டதற்கு, ‘கமல்ஹாசன் என்னை சந்தித்து கவுரவப்படுத்த இருப்பதாகவும், கட்சி தலைமை அலுவலகத்துக்கு வரவேண்டும் என்றும் என்னிடம் அவருடைய கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால் நான் மறுத்துவிட்டேன். ஏனென்றால் நான் அரசு பணியில் இருக்கிறேன். கமல்ஹாசன் கட்சியில் இருக்கிறார். அப்படி இருக்கும் போது இந்த சந்திப்பு சரியாக இருக்காது’ என்றார்.

Comments